கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா

கொள்ளிடம்,ஜூன்6: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவெண்ணீற்றுயம்மை உடனாகிய சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இங்கு திருஞானசம்பந்தருக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. திருஞானசம்பந்தருக்கு இளம் வயதில் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் அன்னை உமையவள் நேரில் தோன்றி திருமுலைப்பால் கொடுத்து மறைந்த வரலாறு உள்ளது.

அதனைத் தொடர்ந்து நல்லூர் பெருமணம் என்று சொல்லக்கூடிய ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தருக்கும் தோத்திர பூரணாம்பிக்கைக்கும் பெரியோர்களின் ஆசியின்படி திருமண விழா நடைபெற்றபோது தம்பதியர்கள் இருவரும் தீயில் புகுந்து முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திருமணம் காண வந்த அனைவரும் தீயில் கலந்து முக்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. திருஞானசம்பந்த சுவாமிகள் மனைவியுடன் திருமணம் காண வந்தவர்களுடன் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் தீயில் கலந்து முக்தி அடைந்ததாக வரலாறு கூறுகிறது.

அதன்படி வைகாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) இரவு 10.30 மணி அளவில் திருஞானசம்பந்த சுவாமியின் திருக்கல்யாண விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திருஞானசம்பந்தர் திருவீதி வலம் வருதலும், அதனை தொடர்ந்து திருமுறைகள் திருவீதி வலம் வருதல், அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு இரு வீட்டார் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.

மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து 10.30 மணி அளவில் திருஞானசம்பந்தருக்கும் தோத்திர பூரணாம்பிகைக்கும் திருகல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி வெள்ளிப் பல்லக்கில் திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அதிகாலை மூல நட்சத்திரத்தில் பேரின்ப பேரளிக்கும் திருப்பதிகம் ஓதுதல் நிகழ்ச்சியும், மணமக்களுடன் திருமணம் காண வந்தோர் அனைவரும் தீயில் கலந்து முக்கி அடைந்த நிகழ்ச்சியான சிவஜோதி தரிசனம் நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஆயிரக்கணக்கான பக்தர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி தேவஸ்தானம் டிரஸ்டி ஸ்தானீகம் காறுபாரு சொக்கநாத தம்பிரான் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா appeared first on Dinakaran.

Related Stories: