நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து… விசாரணையை தொடங்கியது சிபிஐ.. 101 பேர் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!!

புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே, கடந்த 2ம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் மாறி, கிளைப்பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. அவை, மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த ஒடிசா ரயில் விபத்து நாசவேலையாக இருக்கலாம் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதை இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலசோர் அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) நிலையத்தில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிஐ. 10 பேர் அடங்கிய குழு, விபத்து நடந்த பாஹாநாகா ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தது.

ரயில் விபத்திற்கு மின்னணு இன்டர்லாக்கிங் பிரச்சனையே காரணம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ள நிலையில், விபத்து நடந்தது எப்படி என்ற உண்மை காரணத்தை கண்டுபிடிக்கும் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே ஒடிசா ரயில் விபத்து காரணமாக உயிரிழந்த 275 பேரில், 101 பேர் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட வில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 55 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

The post நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து… விசாரணையை தொடங்கியது சிபிஐ.. 101 பேர் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: