குழந்தை மூக்கு உடைந்ததால் நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் புகார்

காஞ்சிபுரம்: அங்கன்வாடி மையத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது மேஜை விழுந்து மூக்கு உடைந்தது தொடர்பாக மக்கள் குறைதீர் கலெக்டரிடம் புகார் தரப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஒன்றியம் குறும்பிறை கிராமத்தை சேர்ந்தவர் சவரணன், இவரது, மகன் யோவான் (மூன்றறை வயது). இந்த குழந்தை குறும்பிறை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்ந்து படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18ம்தேதி அன்று அங்கன்வாடி மையத்திற்கு சென்றிருந்து, யோவான் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக மேசை குழந்தை மீது விழுந்து மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குழந்தையின் அப்பா சரவணன், அங்காவடி மையத்தின் பணியாளர் மலர்கொடி, குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளாததால் இந்த விபத்து ஏற்பட்டது சாலவாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால், கடந்த 2 மாதங்களாகியும் போலீசாரும், சம்பந்தப்பட்ட துறையினரும், அங்கன்வாடி பணியாளர் மலர்கொடி மீது எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதனால் சரவணன், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குழந்தை காயமடைய காரணமாக இருந்த அங்கன்வாடி பணியாளர் மலர்கொடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு அளித்தார். அப்போது, இப்புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில், தனது குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறினார். இதனையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post குழந்தை மூக்கு உடைந்ததால் நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: