சென்னை, புறநகரில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள் மழை

சென்னை: ‘‘மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்’’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து வெயில் வாட்டி வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டியது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் சென்னையில் திடீரென கனமழை பெய்தது. சென்னையில் அசோக்நகர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7ம் தேதி (நாளை) முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார்வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

The post சென்னை, புறநகரில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள் மழை appeared first on Dinakaran.

Related Stories: