உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடக்க விழா: அமைச்சர்கள், எம்.எல்.ஏ, கலெக்டர் பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டுவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடக்க விழா நடந்தது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடக்க விழாவினை அமைச்சர்கள், எம்.எல்.ஏ, கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள், வரிகுதிரை, குரங்குகள், முதலைகள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக் காண தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரியில் \”நமது ஈரநிலம் நமது பெருமை\” என்ற தலைப்பில் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடக்க விழாவினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாகு, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியகுழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் பங்கேற்று நேற்று தொடங்கிவைத்தனர். முன்னதாக ஓட்டேரி ஏரியில் உள்ள நுழைவு பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.

பின்னர், ஏரியில் இருந்த மண்ணை மண்வெட்டி மூலம் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் அள்ளினர். இதனையடுத்து ஈர நிலங்கள் கையேடு வெளியிட்டனர். தொடர்து ஈர நிலங்களை பாதுகாத்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பல்வேறு சமூக பணியில் ஈடுபட்ட சமூக சேவகர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ் நாட்டில் 100 சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவை சதுப்பு நிலத்திற்கு சொந்தமான துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள், மாணவர்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் வரைபடமாக்கப்பட்டு சூழலியல் ரீதியாக மீட்டெடுக்கப்படும்.

சமீபத்தில் 2022ம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 13 புதிய ராம்சார் தளங்களை பெற்றுள்ளது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களான ராம்சார் தளங்கள் நாட்டில் உள்ள 75-ல் 14 தளங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. மேலும், இதில் ஓட்டேரி ஏரி சுமார் 0.91 சதுர கி.மீ நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது. மேலும், இது உயிரியல் பூங்கா பகுதி மற்றும் அதை ஒட்டிய வண்டலூர் காப்புக்காடு வழியாக செல்லும் கால்வாய்களில் இருந்து தண்ணீர் பெறுகிறது. ஏரியின் நீர் 16 ஏக்கர் பரப்பளவில் 2.22 மில்லியன் கன அடி சேமிப்பு திறன் கொண்டது. ஏரி பகுதியிலும் அதை சுற்றியுள்ள மரங்களிலும் சுமார் 12 வகையான பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த ஏரியின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பின் நோக்கம், நீர்சேமிப்பு திறனை அதிகரிப்பதாகும்.

இதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பல்லுயிர் நிலையுடன் குடியிருப்பு மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடத்தின் தரம் மேம்படும். ஈர நிலங்கள் இயக்கத்தின் கீழ், உள்ளூர் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் தீவிர ஈடுபாட்டுடன் ஈரநிலங்களின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உள்ளூர் பல்லுயிர்களை பாதுகாத்தல் மற்றும் நீர் பிடிப்பு திறன், நீர் சுத்திகரிப்பு, உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்த இயக்கத்தினை மக்கள் இயக்கமாக மாற்ற, தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கத்தின் கீழ் இதுவரை 187 ஈரநில நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்.

இயக்கத்தின் தொடக்க விழாவின்போது, 5 ஈரநில நண்பர்களுக்கு அவர்களின் ஆண்டு முழுவதும் ஏரி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக வெகுமதி அளிக்கப்பட்டது. இது சமூக பங்கேற்புடன் அனைத்து 100 ஈரநிலங்களின் சூழலியல் மறுசீரமைப்பில் ஈடுபடுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஊக்குவிக்கும் என்றும், மேலும், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும். ஈர நிலங்களின் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனைத்து ஈரநிலங்களிலும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதனால் இந்த இயற்கை சொத்துக்கள் நீண்டகாலம் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடக்க விழா: அமைச்சர்கள், எம்.எல்.ஏ, கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: