செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க கூடுதலாக தனிப்படை போலீசார் நியமனம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராய பலி உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட எஸ்பி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 21 காவல் நிலையங்களில் புதிதாக தனிப்பிரிவு போலீசாரை நியமித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே கடந்த மாதம் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பரிதாபமாக பலியாகினர். இதன் எதிரொலியாக, மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம், கலால் டிஎஸ்பி சஸ்பெண்ட், மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் என தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அருகே வேண்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புதிய எஸ்பியாக சாய்பிரணீத் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் பொறுப்பேற்றதும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 50 மதுபான பார்களுக்கு சீல் வைப்பு, எரிசாராயம் அழிப்பு என நேரடியாக களத்தில் இறங்கி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட 21 காவல் நிலையங்களில் தற்போது புதிதாக தனிப்பிரிவு போலீசாரை நியமித்துள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சுழற்சி முறையில் 2 தனிப்பிரிவு காவலரை நியமித்துள்ளார். இவர்கள், புகார் கொடுக்க வருபவர்களை செல்போனில் படம்பிடித்து, அவற்றை மாவட்ட எஸ்பி கட்டுப்பாட்டில் உள்ள வாட்ஸ்-அப் குழுவில் பதிவு செய்ய வேண்டும். 21 காவல் நிலையங்களிலும் ஏற்கெனவே மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்க தலா ஒரு தனிப்பிரிவு காவலர் செயல்பட்டு வருகிறார். தற்போது காவல் நிலையங்களில் புதிதாக மேலும் 2 தனிப்பிரிவு காவலர்களை மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் நியமித்துள்ளார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க கூடுதலாக தனிப்படை போலீசார் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: