நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் என்ற கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தினை தொடங்கி வைத்தார் மேயர் ப்ரியா

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் என்ற கருப்பொருள் குறித்த விழிப்புணர்வினை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தினை மேயர் ஆர்.பிரியா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் என்ற உறுதிமொழியினை மேயர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை மாண்புமிகு மேயர் அவர்கள் பார்வையிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வானது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வினையும், நடவடிக்கையையும் ஊக்குவிக்கிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தின் 50ஆவது ஆண்டு நிறைவின் கருப்பொருள் “நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம்” (#BeatPlasticPollution) என்பதாகும். இந்தக் கருப்பொருள் மூலம் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் மாசுபாடு குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகளவில் 19 முதல் 23 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளானது ஏரிகள், ஆறுகள் மற்றும் கடல்களில் கலந்து மாசுபாடு உண்டாகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் மூன்று நாட்களுக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி, மழைநீர் வடிகால் துறையின் சார்பில் விழிப்புணர்வு குழு மற்றும் திட்ட உதவி ஆலோசகர்கள் கொண்ட குழுவினர் வாயிலாக கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது.

இன்று (05.06.2023) அம்பத்தூர் மண்டலம், மதனாங்குப்பம் சாலைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதை தவிர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், 06.06.2023 அன்று திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட சத்தியவாணி முத்து நகர் மற்றும் சன்னதி தெரு, மணலி மண்டலத்திற்குட்பட்ட அய்யா கோயில் சாலை மற்றும் சி.பி.சி.எல். நகர் ஆகிய பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் மூலம் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும், 07.06.2023 அன்று மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட எதைமா நகர் மற்றும் சாரதி நகர், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பாரத் ராஜீவ் காந்தி நகர், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட சிட்கோ நகர் 3ஆவது பிரதான சாலை ஆகிய பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை ஒழித்தல் மற்றும் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்தும் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

The post நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் என்ற கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தினை தொடங்கி வைத்தார் மேயர் ப்ரியா appeared first on Dinakaran.

Related Stories: