மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அரிசிக் கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அரிசிக் கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிகளில் அரிசிக் கொம்பன் யானை விடப்பட உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு உறுதி அளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், யானைகளின் வலசை பாதைகள் ஆக்கிரமிப்பதாலேயே அவை ஊருக்குள் நுழைகின்றன என பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற பேராசிரியர் கோபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில் கடந்த மே 27ம் தேதி முதலே கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களுக்கு, தனிநபர் உடைமைகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. கேரள நீதிமன்றம் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்த யானையை பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதிகளில் விடுவதற்கும் அதனை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் முடிவு செய்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதற்குள் தமிழ்நாட்டிற்குள் யானை புகுந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டு மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இந்த அரிசிக்கொம்பன் யானையை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றவும், கேரளா வனத்துறையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும். அதேபோல யானையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைத்து உரிய இழப்பேடு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, யானைகளின் வலசை பாதைகள் ஆக்கிரமிப்பதாலேயே அவை ஊருக்குள் நுழைகின்றன என்ற கருத்தை தெரிவித்தனர். அரசு தரப்பில் அரிசிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது அரிசிக்கொம்பன் யானை மயக்க ஓடி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் அரவனப்பகுதியான களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிகளில் யானை விடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

The post மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அரிசிக் கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: