சீசன் முடிந்தும் கூட்டம் குறையவில்லை கொடைக்கானலை முற்றுகையிடும் மக்கள்

*கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பி குளிரில் குஷி

*சுற்றுலாத் தொழில் செய்பவர்கள் கொண்டாட்டம்

கொடைக்கானல் : கோடை சீசன் முடிந்த நிலையிலும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், ெகாடைக்கானலில் கடந்த மே மாதத்துடன் கோடை சீசன் முடிந்தது. இந்த சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக நடத்தப்பட்ட மலர் கண்காட்சி மே 30ம் தேதியுடனும், கோடை விழா ஜூன் 2ம் தேதியுடனும் நிறைவு பெற்றது. வழக்கமாக கோடை சீசன் நிறைவு பெற்றவுடன் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு அக்னி வெயில் தாக்கம் முடிந்தும் கோடை வெயில் கொளுத்தி வருவதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கோடை விடுமுறை கடைசி ஞாயிறு மற்றும் வார விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்தது. இதனால் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மோயர் பாயிண்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பைன் பாரஸ்ட் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் முற்றுகையிட்டு இயற்கை அழகினையும், வெண்பஞ்சு மேக கூட்டங்களையும் கண்டு ரசித்தனர். ஏரியில் செயற்கை நீரூற்றை கண்டபடி படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து செல்போனில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். கொடைக்கானலில் நேற்று பகலில் கொஞ்சம் வெயில், மாலையில் சாரல் மழை என மாறி மாறி நிலவிய சீதோஷ்ண நிலையை வெகுவாக ரசித்து அனுபவித்தனர். கோடை சீசன் முடிந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்வதால் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் நேற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த சீசன் காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சீசன் முடிந்தும் கூட்டம் குறையவில்லை கொடைக்கானலை முற்றுகையிடும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: