தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று உறுதி செய்த பிறகே ஒடிசாவில் இருந்து திரும்பினோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே ஒடிசாவை விட்டு கிளம்பினோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த ரயில் விபத்தில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை மீட்டு பத்திரமாக, தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் விபத்து நடந்த இடத்தில் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டனர். அங்கு தங்கியிருந்து, விபத்தில் இருந்து தப்பிய மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், நேற்று மாலை 5:30 மணிக்கு புவனேஸ்வரிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதலில் தகவல் வந்தது. எனவே முதலமைச்சர் எங்களை உடனடியாக ஒடிசா மாநிலம் போக சொன்னார். அதன்படி நாங்கள் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் மார்ச்சுவரிக்கு சென்று ஆய்வு செய்தபோது, அங்கும் தமிழர்கள் உடல்கள் எதுவும் இல்லை. பின்பு ஒடிசா மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். அப்போது அவர்கள், தமிழர்கள் யாரும் இந்த விபத்தில் பாதிக்கப்படவில்லை என்று கூறினர்.

அதன் பின்பு தமிழ்நாடு முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசிய போது, பயணிகள் பெயர் பட்டியலில் 28 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் என்று கூறினார். அவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து விட்டு, நீங்கள் சென்னைக்கு வாருங்கள் என்றார். ஆனால் தமிழர்கள் யாரும் அந்த விபத்தில் இல்லை என்று தெரியவந்தது. அதே நேரத்தில் 8 பேர் மட்டும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தன. ஆனால் நேற்று 3 பேர் பத்திரமாக வீடு திரும்பியுள்ளது தெரிந்தது. மீதமுள்ள ஐவரும் பத்திரமாக இருப்பதாக ரயில்வே போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களிடம் நேரடியாக இன்னும் பேச முடியவில்லை. எனவே இப்போது நாங்கள் வந்து விட்டோம். அரசு அதிகாரிகள் இன்னும் அங்கு தான் தங்கி இருக்கின்றனர். விரைவில் அவர்களையும் கண்டுபிடித்து பேசிவிடலாம் என்று நம்புகிறோம்.

உயிர் இழந்தவர்களின் போட்டோக்கள் ஒடிசா அரசிடம் உள்ளது. அந்த போட்டோக்களையும் நாங்கள் போய் பார்த்தோம். அதிலும் அவர்களின் புகைப்படங்கள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய சொந்த செலவில் ஒடிசாவில் இருந்து விமானங்களில் சென்னை வந்திருக்கின்றனர். ஒடிசா அரசு தான் அவர்களை பஸ்கள் மூலம், புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், ஒடிசா அரசு சிறப்பாக செயல்பட்டு உள்ளது. அதைப்போல் விபத்து நடந்த கிராமங்களை சேர்ந்த மக்களும், மீட்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர். அது மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட ரயில்களில் வந்த சக பயணிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

The post தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று உறுதி செய்த பிறகே ஒடிசாவில் இருந்து திரும்பினோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: