கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போயிருச்சே! சாமி கும்பிட்டு வருவதற்குள் காருக்கு திடீர் சாலை வேலி

புதுக்கோட்டை: பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தார்ச்சாலைகள் அமைப்பது என்பது நீண்ட நாள் பிடிக்கும் பணியாக இருந்தது. தற்போதைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் தார்ச்சாலை போடுவது என்பது துரித உணவு தயாரிப்பது போலாகிவிட்டது. இரவு தூங்கிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் இது நமது தெருதானா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு சாலை போடப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு வேகமாக சாலையை போட்டு விடுகின்றனர். இந்த அவசரத்தில்தான் பல்வேறு கூத்துகள் சிரிப்பை வரவழைப்பதாக அமைந்து விடுகிறது. சாலையின் ஓரத்தில் உள்ள அடி பம்ப்கள், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகள் ஆகியவற்றை அகற்றாமலேயே தார் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைப்பது ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.

இவற்றுக்கு சற்றும் சளைக்காத வகையில் புதுக்கோட்டையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் தற்போது பழைய சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாந்தநாதர் சுவாமி தெருவில் உள்ள சாந்தாரம்மன் கோயில் முன்பு புதிய சாலை அமைத்துள்ளனர். இதில் கோயில் வாசலில் ஒரு கார் நிற்கிறது. அதை அகற்றுவதற்கு நேரமில்லாமல் கார் நிற்கும் இடத்தை மட்டும் விட்டு விட்டு காரைச்சுற்றிய இடங்களில் தார்ச்சாலை அமைத்து நகைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அந்த காரில் வந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனத்திற்கு சென்றிருக்கின்றனர். அவர்கள் திரும்பி வருவதற்குள் இப்படி சாலை அமைத்திருக்கின்றனர். காரில் வந்தவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, சிரித்தவாறு காரை அங்கிருந்து எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த கார் இவ்வாறு அங்கு நிற்பதை போட்டோ எடுத்தவர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அது வைரலாகி வருகிறது.

The post கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போயிருச்சே! சாமி கும்பிட்டு வருவதற்குள் காருக்கு திடீர் சாலை வேலி appeared first on Dinakaran.

Related Stories: