சேலத்தில் இப்படியும் ஒரு பிசினஸ்…ரூ.2,000 நோட்டுக்கு ரூ.800 கமிஷன் வியாபாரிகளை குறி வைக்கும் கும்பல்: நேரில் மாற்றிக்கொடுத்து கல்லா கட்டுகிறார்கள்

சேலம்: சேலத்தில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.800 கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்கும் பிசினஸில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாகவும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் செலுத்தி அதற்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. மேலும், ரூ.20,000 வரையில் 2000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கி கேஷியரிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அதேபோல், வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதாக இருந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் 2000 ரூபாய் நோட்டுகளாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. அதேவேளையில், மிக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ள பெரும் வியாபாரிகள், அதனை மாற்றிக் கொள்ள பலவகைகளில் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. சேலத்தில், டவுன் கடைவீதி, கோட்டை, திருச்சி மெயின்ரோடு, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை பகுதிகளில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் நடத்தி வரும் வட மாநில வியாபாரிகள், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புரோக்கர்களை நாடி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வியாபாரிகளை ஒரு கும்பல் தொடர்பு கொண்டு, 2,000 ரூபாயை மாற்ற ரூ.500 முதல் ரூ.800 வரை கமிஷன் பெற்று மாற்றிக் கொடுக்கின்றனர். கையில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் சுற்றித்திரியும் இக்கும்பலை சேர்ந்தவர்கள், நேரடியாக வியாபாரியிடம் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு நோட்டுக்கு ரூ.800 வரை கமிஷன் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை உடனடியாக கொடுக்கின்றனர். இதனால், வட மாநிலத்தை சேர்ந்த பல வியாபாரிகள், தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை கமிஷனுக்கு மாற்றி வருகின்றனர்.

இதுபற்றி வட மாநில வியாபாரிகள் கூறுகையில், ‘மொத்தமாக வங்கி கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை செலுத்தினால், பல பிரச்னைகள் வரும். சிறிது சிறிதாக மாற்ற நினைத்தால், தொழிலை விட்டுவிட்டு, வங்கி வாசலில் தினமும் நிற்க வேண்டும். அதனால், ரூ.500 முதல் ரூ.800 வரை கமிஷன் கொடுத்து, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறோம். இதனை நாங்கள் முறையாகத்தான் சம்பாதித்தோம் என்றாலும், இத்தகைய செயலில் ஈடுபட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு பணத்தை மாற்றிக் கொடுக்கும் நபர்கள், தொழிலாளர்களை வேலைக்கு வைத்து வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்’’ என்றனர்.

The post சேலத்தில் இப்படியும் ஒரு பிசினஸ்…ரூ.2,000 நோட்டுக்கு ரூ.800 கமிஷன் வியாபாரிகளை குறி வைக்கும் கும்பல்: நேரில் மாற்றிக்கொடுத்து கல்லா கட்டுகிறார்கள் appeared first on Dinakaran.

Related Stories: