ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார் ஒடிசா முதல்வர்!

ஒடிசா: ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் விளக்கினார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளி கிழமை இரவில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு வருகின்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், அவர்களில் 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில், பெட்டிகளை நீக்குவது மற்றும் தண்டவாளங்களை சீரமைப்பது உள்ளிட்ட மறுசீரமைப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்துக்கு பின்னர், நடப்பு சூழ்நிலை பற்றி பிரதமர் மோடியிடம் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் விவரங்களை விளக்கி உள்ளார். இதற்காக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக், இன்று காலை தொலைபேசி வழியே பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, ஒடிசா ரயில் விபத்தில் தற்போதுள்ள சூழ்நிலை பற்றி எடுத்து கூறியுள்ளார். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை பற்றியும் கூறியுள்ளார்.

இதுபற்றி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஒடிசாவின் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த பயணிகளின் உயிரை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்று முதலமைச்சர் நவீன் பட்னாயக் உறுதி கூறியுள்ளார். பயணிகளை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். காயமுற்ற பயணிகளுக்கு ரத்தம் வழங்க மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வந்து உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார் ஒடிசா முதல்வர்! appeared first on Dinakaran.

Related Stories: