ஆம்னி பேருந்து- கார் மோதல் பேராசிரியர் பரிதாப பலி

காரைக்கால், ஜூன் 4: காரைக்கால் அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன். இவர் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், நாகை மாவட்டத்தில் இருந்து காரைக்கால் நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது காரைக்கால் அடுத்த நிரவி 2வது சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து கார் மீது மோதியுள்ளது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. தகவலறிந்த காரைக்கால் தெற்கு போக்குவரத்து எஸ்ஐ ராஜராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பேருந்துக்குள் சிக்கிய காரை வெளியில் இழுத்தனர். மேலும், காருக்குள் உயிருக்கு போராடிய நெப்போலியனை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பேராசிரியர் மரணம் குறித்து தகவலறிந்த சக பேராசிரியர்கள், மாணவர்கள், உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சோகமாக திரண்டனர். நெப்போலியன், காரைக்காலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஜில்லா பவுத்திக் பிரமுக் என்ற பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற அணிவகுப்பிலும் அவர் பங்கேற்றார். உயிரிழந்த அவருக்கு ஓஎன்ஜிசி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ராகினி (39) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விபத்து குறித்து மனைவி ராகினி கொடுத்த புகாரின்பேரில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மயிலாடுதுறை மாவட்டம் அறுபத்துமூவர் பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் (35) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால் விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post ஆம்னி பேருந்து- கார் மோதல் பேராசிரியர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: