ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கிய 133 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சென்னை வருகை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: ஒடிசாவில் ரயில் விபத்துகளில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 133 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சென்னை அழைத்து வரப்படுகின்றனர். தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் கூறியதாவது: விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களின் தகவல்களை சேகரித்து வருகிறோம். காயமின்றி தப்பியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர். தண்டவாள பராமரிப்பு விஷயத்தில் கவனம் இருக்க வேண்டும். ஏனெனில் மெக்கானிக்கல் ரீதியாக தவறுகள் இல்லை. அப்படி இருந்திருந்தால் ரயிலை உடனே நிறுத்தி விடுவார்கள். சிக்னல் பிரச்னையும் கிடையாது அல்லது நாசவேலையும் கிடையாது.

இதனிடையே ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இன்று( நேற்று) இரவு 7 மணியளவில் சென்டரலில் சிறப்பு ரயில் செல்கிறது. இதேபோல் காயம் இல்லாமல் தப்பிய பயணிகள் ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஒடிசா மாநிலம் பாதராக் பகுதியிலிருந்து 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் இன்று(நேற்று) காலை புறப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த 133 பயணிகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நாளை (இன்று) காலை 9 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை வந்தடையும். இவ்வாறு அவர் கூறினார்.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: ரயில் விபத்து காரணமாக நேற்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – புருலியா ரயில் (22606), திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் – ஷாலிமர் விரைவு ரயில் (22641), பெங்களூருவிலிருந்து காலை 8.50 மணிக்கு புறப்படும் பெங்களூரு – கமக்யா ஏசி அதிவிரைவு ரயில் (12551), காலை 10.35 மணிக்கு புறப்படும் பெங்களூரு – ஹவுரா ரயில் (12864), மதியம் 13.50 மணிக்கு புறப்படும் பெங்களூரு – பகலாபூர் விரைவு ரயில் (12253), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சிறப்பு கவுண்டர்கள் அமைத்து கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கிய 133 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சென்னை வருகை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: