ஆர்எஸ்எஸ்-பாஜவுக்கு வேதாந்தா மீது அக்கறை ஏன்? கார்ப்பரேட் கைக்கூலி வேலையை அண்ணாமலை செய்ய வேண்டாம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு கண்டனம்

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசும் கார்ப்பரேட் கைக்கூலி வேலையை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட தகவல்கள் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடிக்கு நேற்று முன்தினம் வந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளனர். அவர்கள் அண்ணாமலையை எச்சரித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ‘25ஆண்டுகள் போராடி, 15 உயிர்களை தியாகம் செய்து ஸ்டெர்லைட்டை மூடியுள்ளோம்! அந்நிய நாட்டு வேதாந்தா-ஸ்டெர்லைட் எதிர்ப்பு எம் ரத்தத்தில் உள்ளது! காவல்துறை அதிகாரியாக இருந்து, பாஜ தலைவராக நேற்று வந்த அண்ணாமலைக்கு தெரியாது. தூத்துக்குடி மக்களின் போராட்ட வரலாறு. முதலில் அர்ஜூன் சம்பத், பின்பு ஆளுநர் ஆர்என்.ரவி, அடுத்து அண்ணாமலை, ஆர்எஸ்எஸ்-பாஜவுற்கு வேதாந்தா மீதென்ன அக்கறை? ஏற்கனவே வேதாந்தாவிடம் பெற்ற நிதிக்கு வேலை செய்கிறீர்களா? இல்லை கூடுதலாக வாங்கப் பேசுகிறீர்களா? கர்நாடகாவுக்குச் சென்று பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தீர்கள்! இப்போது ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாகப்பேசி நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை மூடுவீர்கள் என நம்புகிறோம்! கார்ப்பரேட் கைக்கூலி வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையேல், தூத்துக்குடி மக்கள் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் உரிய பாடம் புகட்டுவோம்!’ என அந்த பதிவில் தெரிவித்துள்ள நிர்வாகிகள் தங்களது செல்போன் எண்களையும் அதில் வெளியிட்டுள்ளனர். இது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஆர்எஸ்எஸ்-பாஜவுக்கு வேதாந்தா மீது அக்கறை ஏன்? கார்ப்பரேட் கைக்கூலி வேலையை அண்ணாமலை செய்ய வேண்டாம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: