சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை புதிய குழாய் பதிக்கும் பணி முடிந்ததும் கூடுதலாக 1,000 மி. லிட்டர் நீர் சப்ளை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து புதிய குழாய் பதிக்கும் பணி முடிந்ததும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கூடுதலாக கிடைக்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். கழிவுநீரகற்றும் பணிகளை இயந்திரங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளுதல் குறித்த பயிற்சி, அயனாவரத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரிய பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. இதை, அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, கழிவுநீர் லாரிகளை இயக்குபவர்களுக்கான சிறப்பு கையேட்டை வெளியிட்டார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, டிஐசிசிஐ அமைப்புடன் இணைந்து சென்னைக் குடிநீர் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்குப் புறம்பாக கழிவு நீரகற்றும் பணிகளை மேற்கொள்வோர் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாக செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.

ஜலஜீவன் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக இந்திய அளவில் முதல் மாநிலம் என்ற விருதை ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாடு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். அப்படி இருந்தால் எப்படி ஒன்றிய அரசு விருதை வழங்கியிருக்கும். குஜராத் மாநிலம் 100 சதவீதம் செயல்படுத்தியுள்ளது என்கிறார். ஏன், அந்த மாநிலத்துக்கு விருது கிடைக்கவில்லை.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து புதிய குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்ததும் சென்னைக்கு கூடுதலாக சேர்த்து 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை புதிய குழாய் பதிக்கும் பணி முடிந்ததும் கூடுதலாக 1,000 மி. லிட்டர் நீர் சப்ளை: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: