மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரசை விமர்சிக்கும் அண்ணாமலை பாஜவை விமர்சிப்பாரா? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு காங்கிரசை விமர்சிக்கும் அண்ணாமலை பாஜவை ஏன் விமர்சிக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 முதல் 2023 வரை முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை ஆட்சி காலத்தில் 2022-23ம் நிதியாண்டில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்கிய பாஜ அரசை எதிர்த்து அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தார். இதை எதிர்த்து குரல் எழுப்பினாரா, இப்போது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவேன் என்று சொல்கிற அண்ணாமலை, அன்று வாய்மூடி மவுனியாக இருந்து விட்டு, இப்போது வீரவசனம் பேசுவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத நடவடிக்கை. கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக ஒரே குரலாக பேசுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில், தமிழக அரசு எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக அதிமுகவும், பாஜவும் பேசி வருவது கர்நாடகத்திற்கு சாதகமாகவே கருதப்படும். தமிழ்நாடு காங்கிரசை விமர்சிக்கிற அண்ணாமலை கர்நாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிற பாஜவை விமர்சிப்பாரா, ஆனால், தமிழ்நாடு காங்கிரசை பொறுத்தவரை கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டின் நலனை காப்பதற்காக தமிழக அரசு எடுக்கிற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம். பாஜவை வளர்ப்பதற்காக அரைவேக்காட்டுத்தனமாக ஊடக வெளிச்சம் பெறுவதற்காக அற்பத்தனமான கருத்துகளை அண்ணாமலை கூறி வருகிறார். இதன்மூலம் மலிவான அரசியல் நடத்தி, தமிழ்நாட்டில் பாஜவை வளர்க்கலாம் என்ற அண்ணாமலையின் எண்ணம் பகல் கனவாகத்தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரசை விமர்சிக்கும் அண்ணாமலை பாஜவை விமர்சிப்பாரா? கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: