பாப்கார்ன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் களமிறங்கியவர் சம்யுக்தா மேனன். அந்தப் படத்தை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வெளியான தீவண்டி என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில் மலையாளத்தில் பிரபல நடிகரான தோவினோ தாமஸ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சம்யுக்தா லில்லி, பென்குயின், கல்கி, போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்தார். அதன்பின், 2019-இல், களரி என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தமிழில், ஜூலைகாற்றில் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவருக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால், மீண்டும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழில், சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சம்யுக்தா. அவர் தனது பிட்னெஸ் ரகசியங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை:
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கேரளா மாநிலம் பாலக்காட்டில்தான். இருந்தாலும், சவுத் இந்தியன் தமிழ்க குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள். அதனால் தமிழ் நன்றாகவே தெரியும். வீட்டிலும் தமிழ் பேசுவோம். சிறு வயது முதலே நான் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன். அதனால், அந்த வயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும், பெரிய ஸ்டார் ஆகவேண்டும் என்பது கனவாகிப்போனது. இந்நிலையில், +2 படிக்கும்போதே மாடலிங்கில் வாய்ப்பு கிடைத்தது. மாடலிங் செய்துகொண்டே பள்ளி, கல்லூரிப் படிப்பை தொடர்ந்தேன். மாடலிங் மூலம்தான் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நானும் நடிகையாகி, என் கனவும் நிறைவேறிவிட்டது.
வொர்க் -அவுட்ஸ்
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்ததால், உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன். அது முதல் இன்றுவரை தினசரி உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். நான் எந்த ஊருக்கு பயணம் சென்றாலும் யோகா மேட்டும் என்னுடன் இருக்கும். ஹெவியான உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும், நடைபயிற்சி, சின்ன சின்ன ஓர்க்கவுட்ஸ், யோகா கட்டாயம் செய்துவிடுவேன். இதுதவிர, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்கூபா டைவிங் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
அதுபோன்று, வீட்டில் இப்போதும், என்னுடைய சின்ன சின்ன வேலைகளை நானேதான் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதுவும் ஒருவகையான ஒர்க்கவுட்தான். ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தேன். லில்லி படத்தின் வாய்ப்பு வந்தபோதுதான், அந்த கேரக்டருக்காக, உடல் எடையை கூட்டினேன். இப்போது கூடியிருக்கும் இந்த எடையை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
டயட்: உடல் பிட்டாக இருக்க வேண்டும் என்றால், டயட்டை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். அப்படியே ஆசைப்பட்டு பிடித்த உணவுகளை சாப்பிட்டுவிட்டாலும், அதற்கேற்ற உடற்பயிற்சிகளை செய்து சமன் செய்துவிடுவேன். பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொள்வேன். காலை உணவாக ஜூஸ் வகைகள், சாலட் வகைகள் கட்டாயம் இருக்கும். அதுபோன்று மதிய உணவில் தினசரி சிறிதளவாவது ரசம்சாதம் கட்டாயம் இருக்கும். ஏனென்றால் , ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு போன்றவை ஜீரணத்திற்கு பெரிதும் உதவும். அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடுவேன். அதில் இறால் கறியும், மீன் பொளிச்சும் ரொம்ப பிடிக்கும். அதுபோன்று ஐஸ்கிரீமை பார்த்துவிட்டால் என் டயட் உறுதியெல்லாம் சற்று தளர்த்திவிடுவேன்.
பியூட்டி
நடிகை என்பதால் வெளியே சென்றாலே மேக்கப்புடன்தான் செல்ல வேண்டும் என்ற விதியெல்லாம் நான் கடைப்பிடிப்பதில்லை. சூட்டிங் நேரத்தில் மேக்கப் தவிர்க்க முடியாது. அப்போதும்கூட முடிந்த வரை, நேச்சுரல் வகை மேக்கப் பொருட்களையே அதிகம் பயன்படுத்துவேன். ஹெவி மேக்கப்பை காட்டிலும் லைட் மேக்கப்பையே அதிகம் விரும்புவேன். எனது பியூட்டி ரகசியத்தில் தேங்காய் எண்ணெய்க்கு பெரும் பங்கு உண்டு. அதுபோன்று தண்ணீர் நிறைய குடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன். அதுவே எனது சருமத்தை வறண்டு விடாமல், பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post சம்யுக்தா மேனன் ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.