மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனம் எனும் நெடுங்குகை!

ஒவ்வொருவரின் மனமும் இருண்ட நெடும் குகை. அவற்றின் இடுக்குகளில் பல கதைகள் வவ்வால்களாக ஒட்டிக் கொள்ளும். – பூரணசந்திரன்என் குடும்பத்தை நானே பார்த்துக் கொள்கிறேன். யாரும் தேவை இல்லை எனக்கூறும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. உண்மையில் ஒரே ஒரு ஆணால் மொத்த குடும்பத்தை தாங்கி நிற்க முடியுமா என்றால்? ஆமாம் முடியும் என்றே நம் டிஜிட்டல் உலகம் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. ஏன் ஆண்கள் “தன் குடும்பத்தை நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று ஆணித்தரமாக சொல்கிறார்கள் என்றால், இருபது வருடங்களுக்கு முன் வரை வீடுகளைப் பொறுத்தவரை, அக்கம் பக்கத்து வீட்டு ஆண்கள்தான் போட்டியாக அவர்களுக்கு இருப்பார்கள். அவர்கள் கூட போட்டிபோட்டால் மட்டும் போதும் என்ற மனநிலை இருந்தது.

ஆனால் தற்போது அப்படி இல்லை, ஒரு ஆண் தன்னுடைய காதலி கூட, தன்னுடைய மனைவி கூட போட்டி போடும் சூழல் உருவாகி விட்டது. இங்கு பெண்களுக்கு நிகராக ஆண்கள் போட்டி போடும் உலகமாக மாறி விட்டது. ஆண்களுக்கு தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய சூழலில் அவர்களுக்குத் தெரியாமலே டிஜிட்டல் உலகம் அவர்களைத் தள்ளிவிட்டது. ஒரு வீட்டில் உள்ள பெண்ணுக்கு ஆங்கில அறிவாக இருக்கட்டும், பைக் மற்றும் கார் ஓட்டுவதாக இருக்கட்டும், வெளியூர் பயணமாக இருக்கட்டும், வேலை ரீதியான முன்னேற்றமாக இருக்கட்டும் இப்படி ஆண்கள் தயவில் இருந்து செய்யும் அனைத்தும் பெண்கள் தனியாக செய்யலாம் என்ற நிலைக்கு நம் மாநிலம் முன்னேறிவிட்டது.

அதனால் காய்கறிகள் வாங்குவதில் இருந்து வெளியூர் அனுப்புவது வரை அனைத்தையும் கணவன் டிஜிட்டலில் பதிந்துவிட்டு, வீட்டில் மட்டும் இருந்து வீட்டு நிர்வாகத்தையும், குழந்தையையும் கவனித்துக்கொள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.பெண்கள் வேலைக்குப் போகட்டும் என்று சொல்லும் ஆண்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெற மாட்டார்கள். இந்த முன்னேற்றத்தின் தாக்கம் சில ஆண்களுக்கு மனத்தளவில் பெரிய வெற்றிடத்தை உருவாக்கி விட்டது. அதனால் தன்னுடைய குடும்பத்தை, அவருக்கான பெண்ணைக் கவரும் பொருட்டு அனைத்தையும் தனியே தாங்கிவிடுவேன் என்ற வீரவசனத்தோடு தான் இன்றைய குடும்பங்கள் வாழப்பழகிக் கொண்டு இருக்கிறது.

ஒரு தனிமனிதனால் குடும்பத்தை நிர்வாகம் செய்யும் பழக்கம் 90களுக்குப் பிறகு தான் ஆரம்பமானது. அதுவும் முதலாளித்துவம் ஆரம்பமாகும் காலக்கட்டத்தில்தான் இந்த மாற்றமும் உருவானது. ஒரு வீட்டுக்குள் நுழைந்தவுடன் அங்கு உள்ள டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டைனிங் டேபிள் சொல்லி அதன் தரத்தைப் பற்றி பேசிய பின்தான், அந்த வீட்டில் உள்ள நபர்களைப் பற்றி பேச ஆரம்பிக்கும் பழக்கமும் அப்போது தான் உருவானது. அதனால் வணிகத்திலும், சமூகத்தில் உள்ள புதுப்பொருட்களின் மாற்றத்திலும் சரி ஆண்களின் அப்டேட் வேகமாக இருப்பதால், வீட்டில் உள்ள பொருட்களின் வரவு அதிகமானது.

வீட்டில் உள்ள கணவரோ யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன் என்ற நிலையில் இருக்கும் போது, பொருளாதாரத்தில் ஏற்படும் நஷ்டங்கள், மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஏற்படும் சிக்கல்கள் என்று யாரிடமும் சொல்லாமல் இருக்கும் போது அவன் தன்னை ஒரு தோல்வியான நபராக பார்க்க ஆரம்பிக்கிறான். அவன் செய்யும் வேலையில் தோல்வி அடைந்தால் கூட அவனால் தாங்கிக்கொள்ள முடிகிறது.

தன்னுடைய குடும்பத்தை நிர்வகிக்க முடியாத அல்லது குடும்பத்தை கையாளத் தெரியாத நபராக என்றாவது ஒரு நாள் சூழலோ, காலமோ உணர்த்தி விடும். அதனால் தன்னை நம்பிய மனைவியை, தான் பெற்ற குழந்தையை இந்த உலகில் யாரை நம்பி விட முடியும்? என்ற கேள்வி கணவர் முன் நிற்கும் போது தான், குடும்பத்தோடு தற்கொலை செய்வதை நாம் செய்திகளில் தொடர்ந்து பார்க்கிறோம். இதேபோல் உள்ள ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

ஒரு மெட்ரோ சிட்டியில் தங்கிப் படித்த ஆணுக்கு அவரது ஊரில் உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. அதில் இருந்து தான் பிரச்சனை ஆரம்பமானது. அந்தப் பையனோ தனக்கான போட்டியாக அவனுடைய குழந்தையைப் பார்க்க ஆரம்பிக்கிறான். குழந்தைக்கு உடம்பு முடியல என்றால்கூட கூகுள் பார்த்து சரியாகும் முறைகளை சொல்வார். ஒரு ஆணாக, கணவராக அவர் மட்டுமே சிறந்த நபராக அவரின் மனைவியின் பார்வைக்குத் தென்பட வேண்டும் என்றே விரும்பினார்.

எந்த வயதில் உள்ள ஆண் குழந்தைகளைப் பார்த்தாலும் பொறாமைப்படும் நபராக இருந்தார். அதனால் சிறுவயதில் உள்ள ஆண் குழந்தைகள் கூட தன் மனைவியிடம் பேசக்கூடாது என்று கூறி விட்டார். இப்படி என்ன சொன்னாலும், வீட்டுக்குள் சினிமாவில் சொல்லப்படும் காதலைத் தான் அவரின் மனைவியிடம் காண்பிப்பார். மனைவிக்கோ தன் மீது கணவர் பாசமாக இருக்கிறார் என்றே நம்ப ஆரம்பித்தார். ஆனால் அது பாசம் இல்லை என்றும், மனநோயின் உச்சத்தில் இருக்கிறார் என்றும் ஒரு நாள் அதன் வீரியம் மனைவிக்கு புரிந்தது.

கணவரின் அம்மா வெளியூருக்கு சென்ற போது, அப்பா அவரின் வீட்டில் வந்து தங்கினார். அந்த நாளில் கணவர், மனைவி, அப்பா மூன்று பேரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் சாப்பிட்ட தட்டில் கையும் கழுவி விட்டார்கள். மனைவியோ ஒரே தட்டில் அந்த கைகழுவிய நீரை மாற்றினார், மனைவி தட்டில் இருந்த நீரோடு, அப்பா தட்டில் இருந்த நீரை ஊற்றி, அதன் பின் கணவரின் தட்டில் இருந்த நீரை ஊற்றினார். இதைப் பார்த்த கணவருக்கோ உச்சக்கட்ட கோபம் வந்து, அந்தத் தட்டில் உள்ள நீரை எல்லாம் அப்பாவின் மீது ஊற்றிவிட்டார். அதோடு இல்லாமல் சாப்பிட்ட தட்டால் அப்பாவின் மண்டையை உடைத்துவிட்டார்.

மனைவியின் தட்டில் தன்னுடைய எச்சில் தண்ணீரை முதலில் ஊற்றாமல், அப்பாவின் தட்டில் உள்ள தண்ணீரை ஊற்றி விட்டாள் என்ற வெறி தான், இந்த அளவிற்கு மூர்க்கமாக நடக்க வைத்தது. சிறு குழந்தை முதல் பெற்ற அப்பா வரை எல்லாருமே தன் மனைவியின் முன் போட்டியாளராக பார்க்க ஆரம்பித்த கணவருக்கு அதுவே மனநோயாக மாறி விட்டது.

அதன் பின் அவருக்கு மனநல மருத்துவமனையில் டாக்டர் மற்றும் சைக்கோதெரபிஸ்ட் சேர்ந்து சிகிச்சை அளித்த பின் நார்மல் வாழக்கைக்கு வர ஆரம்பித்தார். சிகிச்சை முடிந்து ஒரு மாதம் கழித்து செக்அப் வந்த அவரது மனைவி சொன்னது, இப்ப எல்லாம் பாத்ரூம் ரிலாக்ஸாக போக முடிகிறது என்றார். மனநோய் என்பதால் எங்களுக்கு வரக்கூடிய நபர்கள் இப்படி சமூகத்தின் பார்வையில் எல்லை மீறிய நபர்களாக இருக்கலாம். ஆனால் தினமும் செய்திகளில் கடனுக்காக, குடும்பத்தில் நிம்மதியில்லை என்ற காரணத்துக்காக ஏன் குடும்பத்தோடு தற்கொலை செய்ய வேண்டும் என்ற கேள்விதான் நம் முன்னாடி பூதாகரமாக நிற்கிறது.

அனைவருமே தங்களுடைய தனித்தன்மையை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்தத் தனித்தன்மைக்கு வீட்டில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் அங்கீகாரம் வேண்டும் என்ற முறையை கட்டாயமாக்க நினைக்கிறார்கள். இந்த தனிமனித அங்கீகார மாற்றம் மனித உறவுகளுக்குள் மனதளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். கல்வியின் முன்னேற்றத்தால் அறிவு சார்ந்த எண்ணங்களாலும், இயல்பான அறிவியல் முன்னேற்றத்தாலும், தனி மனிதனின் கனவுகளின் உயரத்தாலும் கலாச்சார மாற்றத்தில் ஒவ்வொரு மனிதனும் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறான். அதனால் தன்னை மிகச்சிறந்த திறமைசாலியாக மட்டுமே பார்க்கிறான் அல்லது நம்புகிறான். ஆனால் மனத்தளவில் சிறு தோல்வியைக் கூட தாங்க முடியாத ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டோம் என்றே இந்தியாவின் மிக முக்கியமான உளவியல் நிபுணரான சுதிர்காகர் கூறுகிறார்.

முதலில் என்னளவில் நான் சொல்வதென்றால், ஒரு தனி மனிதராக மொத்த குடும்பத்தின் பொருளாதாரத்தையும், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும் சரி செய்ய வேண்டுமென்றால், உங்களுக்காக இருக்கும் பெரியவர்களையும், நண்பர்களையும் யோசிக்காமல் கலந்தாலோசித்து எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்கப் பழகுங்கள்.

இப்படிக் கேட்பதால் தன்னை முடிவு எடுக்கத் தெரியாத நபராக கற்பனை செய்து விடுவார்கள் என்று நினைக்காதீர்கள். நம்முடைய இயலாமையை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகில் மொத்த தத்துவமும் சொல்வதென்றால் உடல் ஆரோக்கியத்துடனும், மன ஆரோக்கியத்துடனும் தான் இருக்க வேண்டும். அதற்காக முயற்சி செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்றே முழுதாக நம்புங்கள்.

இங்கு எல்லாருமே ஒருவரை ஒருவர் சார்ந்து தான் இருக்கிறோம். தனித்தன்மை என்றுமே அழகுதான், ஆனால் அது கர்வமாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனிதர்களுக்குள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் போது ஏற்படும் தனித்தன்மையின் அழகு உலகத்தால் வசீகரிக்கப்படும். அப்படிப்பட்ட வசீகரிக்கப்பட்ட நபராக என்றுமே இருக்கப் பாருங்கள்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: