பாலுடன் சேர்ந்த சர்க்கரைபோல் தமிழ்நாட்டின் மரபு, கலாசாரத்தை பின்பற்றி நீதிமன்ற பணிகளை மேற்கொள்வேன்: புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா உறுதி

சென்னை: தமிழ்நாட்டின் கலாசாரம், மரபுகளை பின்பற்றி அதனுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலாவுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி லூயிசாள் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் செல்வராஜ் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

இதையடுத்து, ‘வணக்கம்’ என தமிழில் கூறி, ஏற்புரையை தொடங்கிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, தனக்கு அளித்த வரவேற்புக்கு ‘நன்றி’ எனவும் தமிழில் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘பல சான்றோர்களையும், கலை கலாசார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது. சென்னை உயர் நீதிமன்றம், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் தந்துள்ளது. இளையவர்களும் அந்த பெருமையை தொடர்ந்து கொண்டு செல்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முடிவுகள் எடுக்கும் போது, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் பெறப்படும். பெர்சியாவில் இருந்து பார்சி மக்கள் குஜராத் கடற்கரையில் வந்து இறங்கினர். அப்போது, அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் ஒரு டம்ளர் நிறைய பாலை வைத்து காட்டி உங்களுக்கு இங்கு இடம் இல்லை என்று பார்சி மக்களிடம் கூறினார். உடனே அந்த பார்சி மக்களின் தலைவர் ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து பாலில் கலந்து பாலுடன் கலந்த சர்க்கரை போல உங்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்து வாழ்வோம் என்றார். அதேபோல் நானும் பணியாற்றுவேன். எவருக்கேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும். தமிழகத்தின் மரபு, கலாச்சாரங்களை பின்பற்றி அதனுடன் இணைந்து பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாலுடன் சேர்ந்த சர்க்கரைபோல் தமிழ்நாட்டின் மரபு, கலாசாரத்தை பின்பற்றி நீதிமன்ற பணிகளை மேற்கொள்வேன்: புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: