அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கற்போம் திட்டத்திற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு: மாநில திட்ட இயக்குனர் தகவல்

வேலூர்: தொடர்ந்து கற்போம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில திட்ட இயக்குனர் தெரிவித்தார். இதுகுறித்து மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ், 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.பள்ளியில் சேர்க்கப்படாத அல்லது பள்ளிக்கு வராத குழந்தைகள், பள்ளிக்கு வெளியே இருக்கும் குழந்தைகளாக கருதப்படுகின்றனர்.

அத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு தரமான கல்வியை வழங்குவது இடைநிற்றலுக்கான முக்கிய அளவுகோல் ஆகும். அதைபோன்று ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் பள்ளிக்கல்வியினை பாதியில் கைவிடும் மாணவர்கள் இனம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கி தொடர்ந்து பள்ளிக்கல்வியினை தொடர செய்வதும் ஓஓஎஸ்சியின் திட்டகூறுகளில் ஒன்றாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ‘தொடர்ந்து கற்போம்’ என்ற ஒரு முன்னோடி திட்டத்தினை வடிவமைத்து அதனை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, தொடர்ந்து கற்போம் என்ற முன்னோடி திட்டமானது 2023-24ம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் மாவட்டங்களில் பள்ளி அளவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு அந்தந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு இன்று முதல் வரும் 30ம்தேதி வரை 30 நாட்கள் திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரூ.1 கோடியே 99 லட்சத்து 43 ஆயிரத்து 280 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்விற்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களை துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க செய்வது, தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் பங்குபெறச் செய்வது மற்றும் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதி கல்வியினை தொடரச் செய்வதை உறுதி செய்தலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கற்போம் திட்டத்திற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு: மாநில திட்ட இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: