புதிதாக கட்டப்படும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் எஸ்கலேட்டர்

சேலம், ஜூன் 1: சேலம் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக ₹2.30 கோடியில் எஸ்கலேட்டர் (தானியங்கி படிக்கட்டு) அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5வது பெரிய நகரமான சேலம் மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகரில் ஈரடுக்கு மேம்பால பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டை நவீனப்படுத்த முடிவு செய்து, இடித்து அகற்றி விட்டு ₹92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக மாற்றும் பணி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. பணிகள் 95 சதவீதம் வரை முடிந்துள்ளது. தற்போது திருவள்ளுவர் சிலையில் பழைய பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி, தார்ச்சாலை, பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு, வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் தரை தளத்தில் டூவீலர் பார்க்கிங், கடைகள், மேல் தளத்தில் பஸ்கள், நவீன வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள் அமைக்கப்படுகிறது. மேலும் பஸ் ஸ்டாண்டில் சோலார் பேனல்களும் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் தரைத்தளத்தில் இருந்து மேல் பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல இரு இடங்களில் படிக்கட்டுகள் உள்ளன. இங்கு எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்று பல தரப்பினர் ஒன்றிய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் எஸ்கலேட்டர் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் வைபை இணைப்புடன் பயணிகள் தங்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டுக்கு 430 பஸ்கள் வந்து செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

11,500 சதுர மீட்டரில் தரைத்தளம் அமைக்கப்பட்டு, 4586 சதுர மீட்டரில் வணிக உபயோகத்திற்காக 54 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 1,181 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 29 கடைகளும், 11 அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. இத்தளத்தில் 26 பஸ்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 2ம் தளத்தில் 47 கடைகள் அமைக்கப்பட்டு, 26 பஸ்கள் நிறுத்தம் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கூரை தளத்தில் 11 கடையும், ரயில் நிலையத்தில் உள்ளது போல், பஸ் ஸ்டாண்டில் வைபை இணைப்பு வசதியும், ஏ.சி வசதியும், பயணிகள் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக எஸ்கலேட்டர் (தானியங்கி படிக்கட்டுகள்) அமைப்பது தொடர்பாக கடந்த மார்ச் 24ம் தேதி நிர்வாகக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ₹2 கோடியே 30 லட்சம் மதிப்பில் எஸ்கலேட்டர் அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்கலேட்டர் ஏழு மீட்டர் உயரத்தில் மேலே ஏறவும், இறங்கவும் அமைக்கப்படுகிறது. எஸ்கலேட்டர் அமைக்க விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

The post புதிதாக கட்டப்படும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் எஸ்கலேட்டர் appeared first on Dinakaran.

Related Stories: