அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் பொருத்தினால் ₹10,000 அபராதம்

சேலம், ஜூன்1: சேலம் மாநகரில் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் பொருத்தியிருந்தால், ₹10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாநகரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இதில் ஒரு சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலும் மதிக்காமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமலும், செல்போன் பேசிக்கொண்டும் வாகனத்தை இயக்குவதால் எதிரே வரும் வாகனத்தை கவனிக்காமல், அதன் மீது மோதும் நிலை உள்ளது. இதனால் சரியாக வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் ஒருசில வாகன ஓட்டிகள் வழக்கத்தை விட, மிக அதிக அளவு சத்தத்துடன் கூடிய சைலென்சரை பொருத்துகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘‘இளைஞர்கள் சிலர் அதிக சத்தத்துடன் கூடிய சைலென்சரை பிலிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் இணையதளங்களில் வாங்கி, தங்களுடைய இருசக்கர வாகனத்தில் பொருத்துகின்றனர். இவை இயல்பான சத்தத்தை விட மிக அதிக அளவு ஒலி எழுப்புகிறது. இது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதால், இத்தகைய சைலென்சர் பொருத்தியுள்ள வாகன ஓட்டிகளுக்கு ஸ்பாட் பைனாக ₹10,000 வரை அபராதம் விதிக்கிறோம். மேலும் சைலென்சர்கள், ஹெர் ஹார்ன்களையும் பறிமுதல் செய்து வருகிறோம். எனவே வாகன ஓட்டிகள் போக்குரத்து விதிமுறைகளை முறையாகவும், பொறுப்புடனும் பின்பற்ற வேண்டும்,” என்றனர்.

The post அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் பொருத்தினால் ₹10,000 அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: