பெண்களிடமும், இளைஞர்களிடமும் அதிகரிக்கும் டாட்டூ மோகம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

இளைஞர்களிடம் டாட்டூ மோகம் அதிகரித்து வருகிறது. காசு கொடுத்து நோயை வாங்க வேண்டாமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். தற்போதுள்ள இளைஞர்கள் பல விஷயங்களில் பணத்தைக் கொடுத்து நோயை வாங்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் பச்சை குத்துதல் எனப்படும் டாட்டூ மோகம் தற்போது ஆண், பெண் என இருபாலரிடமும் அதிகரித்து வருகிறது. இந்த டாட்டூ என்பது தற்போது தோன்றிய பழக்கவழக்க முறையல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த முறை இருந்துள்ளது. பண்டைய காலத்தில் எகிப்து நாட்டில் மம்மி செய்யப்பட்ட மனித எச்சங்களில் பாதுகாக்கப்பட்ட பச்சை குத்தியதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. பச்சை குத்துதல் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இரண்டு பழமையான பச்சை குத்தப்பட்ட மம்மிகளின் வயதை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்தனர். அப்போது அந்த குறிப்பிட்ட உடலில் 61 இடங்களில் பச்சை குத்தியதற்கான அடையாளங்கள் இருந்தன. அந்த உடல் ஆப்கனில் உள்ள பனிப்பாறை பணியில் பதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று பல நாடுகளிலும் பச்சை குத்துதல் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. குறிப்பாக ஜப்பானில் ஐனு மக்களிடையே பச்சை குத்துதல் முறை நடைமுறையில் இருந்தது. இன்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலை, ஒப்பனை, உணர்வு, மதம், ஆன்மிகம் மற்றும் மற்றவர்களின் நினைவிற்காக பச்சை குத்திக் கொள்கின்றனர்.

ஆனால் ஒரு காலத்தில் பச்சை குத்திக் கொண்டவர்களின் வாழ்க்கைமுறை மிகவும் கரடு முரடான வாழ்க்கை முறையாக இருந்தது. பல நாடுகளில் கைதிகளுக்கு பச்சை குத்தினர். மேலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்லும் நபர்களுக்கும் பச்சை குத்திய வரலாறு உண்டு. சில இடங்களில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் பச்சை குத்தி உள்ளனர். சில ஊர்களில் குறிப்பிட்ட பெண்களுக்கு அவர்கள் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, அவர்களுக்கும் பச்சை குத்தி உள்ளனர். இவ்வாறு பச்சை குத்துதல் எனப்படும் முறைக்கு பின்னால் பல்வேறு வரலாறுகள் உள்ளன. சில இடங்களில் வெளிநாடுகளுக்கு பச்சை குத்திச் சென்றால் அவர்களை அனுமதிப்பது இல்லை.

ஏனென்றால் ஒரு சில நாடுகளில் தீவிரவாதிகள் அல்லது மாவோயிஸ்ட்கள் மட்டுமே பச்சைக்குத்தி கொள்வார்கள் என்ற நடைமுறையும் இருந்தது. ஆனால் இந்த நடைமுறைகள் அனைத்தும் தற்போது தகர்த்து எறியப்பட்டு பச்சை குத்துதல் என்ற ஒரு முறை பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது அனைத்து நாடுகளிலும் டாட்டூ என்ற புதிய பரிணாம வளர்ச்சியில் இந்த முறை சிறப்பு பெற்று வருகிறது. மேலை நாடுகளில் எந்த கலாச்சாரம் தோன்றினாலும், அதனை உடனடியாக மோப்பம் பிடித்து இழுத்துக்கொள்ளும் நம்மூர் இளைஞர்களும் தற்போது விதவிதமான வடிவங்களில், வண்ணங்களில் டாட்டூ எனப்படும் பச்சையை குத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஒருபடி மேலே சென்று பெண்களும் தங்களது உடல் பாகங்களில் அவர்களுக்குப் பிடித்த டிசைன், காதலன், கணவனின் பெயரை குத்திக் கொள்கின்றனர்.

உடலில் எந்தெந்த பாகங்களை மறைத்து ஆடை அணிய வேண்டுமோ, அந்தந்த பாகங்களை திறந்துவிட்டபடி அந்த இடங்களில் டாட்டூ குத்திக்கொண்டு அதனை ஸ்டைலாக வெளியே காண்பித்துச் செல்கின்றனர். டாட்டூ குத்துவதில் பிரச்னைகள் உள்ளதா என்று கேட்டால் கண்டிப்பாக உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த டாட்டூ எப்படி குத்தப்படுகிறது, இதை அப்புறப்படுத்த எதுபோன்ற கஷ்டங்களை டாட்டூ குத்தியவர்கள் அனுபவிக்கின்றனர் என்பது குறித்து, கடந்த 15 வருடங்களாக டாட்டூ குத்துவதில் நன்கு தேர்ச்சி பெற்ற தி.நகர் பகுதியில் ப்ரொபைல் லான்ச் எனும் கடையில் டாட்டூ குத்தும் தொழில் செய்து வரும் சத்தியா என்ற பாபி (34) கூறியதாவது: கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நான் 9வது படித்தபோது டாட்டூ போடுவதில் ஆர்வம் ஏற்பட்டு, அதன் பிறகு படிப்படியாக அதனைக் கற்று தற்போது சென்னையில் பல நபர்களுக்கு போட்டு வருகிறேன்.

மேலை நாடுகளில் பிரபலமாவதற்கு முன்பு நமது ஊரில் குருவிக்காரர்கள் அதிகமாக இதனை செய்து வந்தனர். குருவிக்காரர்கள் பச்சை குத்துதல் எனும் முறையில் இதனை செய்து வந்தனர். சிறிய அளவிலான விளக்கை வைத்து மேலே வரும் புகையில் உள்ள கரியை சேர்த்து வைத்து ஊசி மூலம் இதனை செய்து வந்தனர். அதன் பிறகு எருக்கம் பூவில் வரும் பாலினை எடுத்து, அதில் சாயத்தை கலந்து அதில் பச்சை குத்த தொடங்கினர். அதன் பிறகு பேப்ரிக் பெயின்ட் எனப்படும் பொருட்களை பயன்படுத்தி செய்ய தொடங்கினர். தற்போது, டாட்டூஸ் இங்க் எனப்படும் பொருள் வந்துவிட்டது. இது பழங்களிலிருந்து எடுக்கப்பட்டது எனக் கூறினாலும் இதில் கெமிக்கல் கலந்திருப்பது தான் உண்மை. பழைய டாட்டூ முறையில் ஒரு கோடு போட்டால் அதை பெரிதாக காண்பிக்கும். அந்த அளவிற்கு துல்லியமாக இருக்காது.

ஆனால் தற்போது நாம் என்ன வரைய நினைக்கிறோமோ, அதை துல்லியமாக வரையும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. பழைய முறையில் கையில் எழுதிவிட்டு அதன் மீது ஊசி வைத்து குத்துவார்கள். அந்த ரணம் ஆறுவதற்காக மேலே மஞ்சள் பூசுவார்கள். ஆனால் தற்போது மிகச் சிறிய அளவிலான ஊசி வந்துவிட்டது. எனவே அதனை பயன்படுத்தி டாட்டூ குத்துகிறார்கள். இதன் மூலம் ஏற்படும் ரணம் சரியாவதற்கு பேபி ஆயில் போட்டாலே போதுமானது. டாட்டூ ஆரம்பித்த காலத்தில் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தி டாட்டூ போட்டு வந்தார்கள். இதனால் பல பிரச்னைகளும், நோய்களும் ஏற்பட்டன. ஆனால் தற்போது ஒரு நபருக்கு ஒரு ஊசியை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மேலும் அதன் மீது கேப் எனப்படும் ஒரு பொருளை பயன்படுத்துகின்றனர்.

இதை பயன்படுத்தி முடித்தவுடன் தூக்கி எறிந்து விடுகின்றனர். தற்போது டாட்டூ போட்டு முடித்த பிறகு புதிதாக டாட்டூ கவர் என ஒன்று வந்துள்ளது. அதை கையில் சுற்றிக்கொண்டு 3 நாட்கள் கழித்து எடுத்து விட்டால் எந்தவித ரணங்களும் இல்லாமல் டாட்டூ அழகாக வந்துவிடும். தற்போது வெளிநாடுகளில் 3டி டாட்டூ வந்து விட்டது. இன்னும் சென்னை போன்ற நகரங்களில் அது பெரியதாக அறிமுகமாகவில்லை. இரவில் பார்த்தால் கூட தெரியக் கூடிய வகையில், மிளிரக் கூடிய வகையில் அந்த டாட்டூ இருக்கும். விரைவில் இங்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு டாட்டூ கலைக்கு தனியாக படிப்புகள் கிடையாது. ஆனால் தற்போது அதற்கு தனியாக படிப்புகள் வந்துவிட்டது. டாட்டூ போட்டுவிட்டால் முன்பெல்லாம் அந்த இடத்தில் குண்டாக வீங்கிவிடும். நன்றாக இந்த கலையை கற்காதவர்கள் டாட்டூ போட்டால் இப்படி ஆகிவிடும்.

இதன் மூலம் டாட்டூ குத்திக் கொள்பவர்களுக்கு அதிகமாக வலி ஏற்படும். தற்போது இதனை மிகவும் நுணுக்கமான முறையில் பயன்படுத்தி போட்டுவிட்டால், இதுபோன்ற புண் ஏற்படாது. நமது உடலில், தோளில் 7 வகையான லேயர் இருக்கும். இதில் டாட்டூ போடும்போது முதல் 2 லேயரை மட்டுமே ஊசி வைத்து நாங்கள் துளையிடுவோம். 3வது லேயருக்குச் செல்ல மாட்டோம். சில நேரங்களில் செல்லும் நிலை ஏற்பட்டாலும் நிறுத்திக் கொள்வோம். ஆனால் சிலர் 4வது லேயர் வரை சென்று விடுவார்கள். இதனால் ரத்தம் வெளியே வந்துவிடும். ஒருவர் முறையாக டாட்டூ போட்டாரா என்பதை அவர் போட்டு முடித்தவுடன் குறிப்பிட்ட அந்த இடத்தில் பபுல்ஸ் வராமல் இருப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். அவ்வாறு பபுள்ஸ் வந்துவிட்டால் அவர் முறையாக டாட்டூ போடவில்லை என அர்த்தம். முன்பெல்லாம் ஒரு ஏரியாவுக்கு ஒருவர் மட்டுமே டாட்டூ போட்டுக் கொண்டு இருந்தார்.

தற்போது பியூட்டி பார்லர் போன்ற பல இடங்களில் செய்து வருகின்றனர். முன்பெல்லாம் ஒரு புத்தகத்தில் உள்ள டிசைனை காண்பிப்போம், அதில் கஸ்டமருக்கு எது பிடிக்கிறதோ அதை டாட்டூவாக போட சொல்வார்கள். ஆனால் இப்போது வரும் கஸ்டமர்கள் அனைவரும் தங்கள் செல்போனில் உள்ள டிசைன்களை காண்பித்து அதேபோன்று போடச் சொல்கிறார்கள். இன்டர்நெட்டில் சென்று விதவிதமான டிசைன்களை காண்பிக்கின்றனர். இதனால் தற்போது டிசைன் போடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. ஒரு தடவை டாட்டூவை போட்டுவிட்டு அதனை எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் பழைய மாதிரி ஒரு தோல் லேயர் வராது. ஏனென்றால் கண்டிப்பாக டாட்டூவை நீக்கும்போது அந்த இடம் புண்ணாகும். அதன் பிறகு மருந்து போட்டு அதனை சரி செய்து, அதன் மீது மீண்டும் ஒரு டாட்டூவை போட்டால்கூட பழைய நிலைக்கு வரவே வராது.

பலபேர் இன்று தங்களது காதலன் அல்லது காதலியின் பெயரை குத்திக் கொள்வார்கள். அதன் பின்பு எங்களுக்கு தனித்தனியே திருமணம் ஆகப்போகிறது, நாங்கள் பிரிந்து விட்டோம். அதனால் இதனை அழித்து விடுங்கள் என்று வருவார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு அதனை அழித்தாலும் அந்த இடத்தில் ஒரு விதமான தழும்பு போன்று ஏற்பட்டு விடும். அதனை மறைக்க அதன் மேலே மீண்டும் ஒரு டாட்டூ போடச் சொல்வார்கள். தோல் மருத்துவர்கள் பயன்படுத்தி வந்த ஒரு விதமான மெஷினை வைத்து தற்போது டாட்டூவை எடுக்கிறோம். அதிகப்படியான சூடு அந்த மிஷினில் இருக்கும். அதனை வைத்து டாட்டூவை அழிப்பதனால் தோல்களில் புண் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஒரு தடவை டாட்டூவை போட்டு விட்டார்கள் என்றால், அவர்கள் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். கண்டிப்பாக மீண்டும் வேண்டும் என்று வந்து டிசைன்களை மாற்ற சொல்வார்கள்.

அல்லது உடலில் வேறு பாகங்களில் டாட்டூ போட சொல்வார்கள். அந்த அளவிற்கு தற்போது பெண்களிடமும், இளைஞர்களிடமும் டாட்டூ மீது அதிக நாட்டம் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு அடிக்கு 500 ரூபாய் கட்டணமாக பெற்றுக் கொண்டு இருந்தோம். ஆனால் இப்போது அப்படி கிடையாது. அவர்கள் கொண்டுவரும் டிசைனைப் பொறுத்து பணம் நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக ₹2,500ம், அதிகபட்சமாக அவர்கள் கொடுக்கும் வேலைக்கு ஏற்றார் போல் பணம் வாங்கப்படுகிறது. இதன் மீது மோகம் கொண்ட சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கு டாட்டூ போட்டுக் கொள்கின்றனர். சென்னை மட்டுமல்லாது கோயம்புத்தூர், சேலம், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வந்து டாட்டூ போட்டுச் செல்கின்றனர். இதை ஒரு கலையாக நாங்கள் பார்க்கிறோம். அதை டாட்டூ போட்டுக் கொள்பவர்கள் ஒரு மாடலாக பார்க்கின்றனர். இதில் அவ்வளவுதான் உள்ளது. முறையாக நன்கு பயிற்சி பெற்றவர்களிடம் டாட்டூ போட்டுக் கொண்டால் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என தெரிவித்தார்.

தோல்களில் பிரச்னை ஏற்படும்
டாட்டூ எனப்படும் பச்சை குத்திக் கொள்வதன் மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் தோல் மருத்துவ துறையின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ஆனந்தன் கூறுகையில், ‘‘தோல்களில் பச்சை குத்திக் கொள்வதால் அந்த இடத்தில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது சாதாரண பாக்டீரியா அலர்ஜியாகவும் இருக்கலாம். அல்லது பெரிய அளவிலான வைரஸ் தாக்குதலுக்கான அலர்ஜியாகவும் இருக்கலாம். குறிப்பாக ஒரே நீடிலை பலருக்கு பயன்படுத்துவதால் எச்ஐவி போன்ற நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு சாதாரணமாகவே தோல்களில் தழும்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அவர்கள் பச்சை குத்திக் கொள்ளும்போது அவர்களுக்கு அதிகப்படியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கருப்பு நிற டாட்டூகளை எளிதில் நீக்கி விடலாம். வண்ணமயமான டாட்டூகளை நீக்குவது கடினம் என சிலர் சொல்கின்றனர். நாம் சாதாரணமாக இருக்கும் உடம்புக்குள் எந்த விதமான கெமிக்கலை உள்ளே செலுத்தினாலும் அதில் பிரச்னை ஏற்படும். டாட்டூ போட்டுக் கொள்வதால் எந்த ஒரு பயனும் கிடையாது. ஒரே ஒரு பயன் உள்ளது என்றால், அது டாட்டூ குத்தும் கலைஞர்களுக்கு பணம் வரும் என்பது மட்டும் தான். எனவே இளைஞர்கள் தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டி உடலை வருத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

டாட்டூ சந்தோஷம்
டாட்டூ குத்திக் கொள்வதால் ஏதாவது நன்மைகள் உள்ளதா என்று கேட்டால், நாங்கள் டாட்டூ குத்திக் கொண்டோம் என அவர்கள் வெளியில் கூறிக் கொள்ளலாம். அதை காண்பித்து சந்தோஷப்படலாம்.
மற்றபடி அதற்கு எந்த ஒரு நன்மையும் இல்லை என்பது மருத்துவர்கள் கூறும் நிதர்சனமான உண்மை.

The post பெண்களிடமும், இளைஞர்களிடமும் அதிகரிக்கும் டாட்டூ மோகம்: எச்சரிக்கும் மருத்துவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: