நூறுநாள் வேலைதிட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளால் சோலைவனமாக மாறும் சிவகாசி கிராமங்கள்: இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு

சிவகாசி: சிவகாசியில் பல்வேறு கிராமங்களில் நூறு நாள் வேலை திட்டத்தில் மரக்கன்று நடும் பணிகளில் அதிக ஈடுபாடு இருப்பதால் ஏராளமான கிராமங்கள் பசுமை சோலையாக காட்சியளிக்கின்றன. உலகளவில் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபட்டு வருவதால், அவற்றை தடுப்பதற்கு ‘மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம்’ என்று உலக சுகாதார ஆய்வு மையம் அறிவுறுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் அபாயத்தால் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இதனால் பருவ மழையின் அளவு குறைகிறது. இந்நிலையில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் மரக்கன்றுகள் ஆர்வமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. கிராம ஊராட்சிகளில், ஒன்றிய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஆண்டுக்கு 100 நாள் கட்டாயப்பணி என்ற அடிப்படையில், பலர் பணி செய்து வருகின்றனர்.

இதில், கால்வாய்களை அகலப்படுத்துதல், சாலையோரத்தில் அடர்ந்து வளர்ந்திருக்கும் முட்புதர், செடி, கொடிகளை வெட்டி அகற்றுதல், மைதானம் அமைத்தல், மண் சாலை அமைத்தல், குளம், குட்டை வெட்டுதல், மரக்கன்று நடுதல், தனிநபர் கழிப்பறை அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த சில ஆண்டுகளாக சிவகாசி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் மரக்கன்று நடும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. மரகன்று வைத்தல், பராமரித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் பெரும்பாலான ஊராட்சி நிர்வாகம் பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சில ஊராட்சிகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மரக்கன்று வைத்து வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக ஆனையூர், கொத்தனேரி, தேவர்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், குமிழங்குளம், பூவநாதபுரம், மண்ணுக்குமீண்டான்பட்டி போன்ற கிராமங்களில் மரக்கன்று நடுதல், பராமரிப்பு பணிகள் மிகவும் ஆர்வமுடன் செய்யப்பட்டுள்ளன. இதில் சில ஊராட்சிகளில் கிராம மக்களின் ஆர்வம் அதிகமாக உள்ளன. இதில் கொத்தனேரி, குமிழங்குளம் கண்மாயில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்று வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்மாய்கள் தற்போது பசும் சோலையாக அழகாக காட்சியளிக்கின்றன. பூவநாதபுரம், மண்ணுக்குமீண்டான்பட்டி உட்பட கிராமங்களில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனையூர் ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம், கட்டளைபட்டி ரோடு, ஆனையூர் ரோடு உட்பட மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சமூக ஆர்வலர் என்ஜிஓ காலனி அஜய்கிருஷ்ணா கூறும்போது, ‘‘நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் இந்த பணிகள் தொடங்கப்பட்டாலும் கிராம இளைஞர்கள், சமூக ஆர்வலர்களின் பங்கு அதிகமாக இருக்கின்றது. ஆடு, மாடுகளிடமிருந்து ஒன்றரை வருடம் பாதுகாத்து வளர்த்ததால் பெரும்பாலான கிராமங்களில் மரங்கள் வளர்ந்து பசும்சோலையாக உள்ளது. வெளியில் ஆயிரம் டென்சனான வேலை செய்துவிட்டு வந்தாலும் கிராமத்திற்குள் நுழையும் போது மனதிற்குள் மகிழ்ச்சியான தோற்றம் ஏற்படுகின்றது. அனைத்து கிராமங்களிலும் மரக்கன்று நடும் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும் பணி என்று செய்யாமல் தங்கள் பிள்ளை என்று நினைத்து மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும். இன்று நாம் வளர்க்கும் மரக்கன்றுகளால் வரும் தலைமுறையும் நம்மை வாழ்த்தும்’’ என்று தெரிவித்தார்.

The post நூறுநாள் வேலைதிட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளால் சோலைவனமாக மாறும் சிவகாசி கிராமங்கள்: இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: