மந்திரப் பானைகள்..!

பல நாடுகளிலும் மண் பானைகளை இப்படிச் சொல்லிதான் அதிகளவில் விற்பனை செய்கிறார்கள். பல வோல்ட் மின்சாரம் , பெரும் செலவு எனச் செய்தால்தான் ஒரு ஃபிரிட்ஜ் அதன் மூலம் ஒரு பாட்டில் குளிர்ந்த நீர் கிடைக்கும். ஆனால் வெறும் சொற்பச் செலவில் வாங்கி வைக்கும் மண்பானை எப்படி அவ்வளவு அருமையான ஜிலீர் நீரைக் கொடுக்கிறது. மேலும் இயற்கையான, உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக் கூடிய அத்தனை நற்பண்புகள் மண்பானை நீரில் நிறைந்துள்ளன. வீட்டில் எப்படி மண்பானை அமைக்கலாம், எப்படிப் பராமரிக்கலாம், என்னென்ன நன்மைகள் உள்ளன என்று பார்க்கலாம்.

மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் ெவயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும். வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும். கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!?
மண்பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள்தான். மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாய் வியர்த்திருப்பது ேபான்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது. வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.

பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும் இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது. ஆனால், இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது. ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும் 5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

மண் பானை நீர் வைக்கும் முறை

புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. வாங்கியவுடன் நன்கு நீரில் மூழ்க வைத்து அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் ஒரு வாரத்திற்கு தண்ணீரை மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம். முடிந்தால் அரிசி கழுவிய நீரைப் பயன்படுத்தலாம். நீர் சேமிக்க, சமைக்க, சாப்பிட என எதற்கு மண்பானை வாங்கினாலும் பழக்கப் படுத்துவதற்கு முன் செய்யவேண்டிய முறை இதுதான்.
மண்பானையை வைக்கும் இடத்தைத் தேர்வு செய்துவிட்டு, சிறிது ஆத்து மணலை பரப்பிக் கொள்ளவும். அதன் மேல் மண்பனையை வைத்து நீர் ஊற்றி வைக்க சரியாக இரண்டு மணி நேரங்களில் நீர் குளிர்ச்சி அடைந்துவிடும். மேலும் பானையில் இருக்கும் நீர் தீர்ந்துவிடுவதற்கு முன் மீண்டும் பானையை நிரப்பி வைத்துவிட்டால் அடுத்து இரண்டு மணி நேரத்தில் முழு பானை நிறைய சில்லென நீர் கிடைக்கும்.

மண் பானை நீர் கொடுக்கும் ஆரோக்கியப் பலன்கள்!

களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். களிமண் பானை தண்ணீர் தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும். இதனால் சளி இருமல் உள்ளவர்கள் கூட இதனை பயப்படாமல் அருந்தலாம். பானையில் தண்ணீர் குடிப்பதால் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமன் செய்ய உதவுகிறது. இது உங்களுடைய உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த உதவுகிறது. மண் பானை தண்ணீரில் இயற்கையாக இருக்கும் ஆல்கலைன் நம்முடைய உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன. மண் பானையில் சேமிக்கப்படும் நீரிலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம்முடைய உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைப்
பராமரிக்க உதவுகிறது.
– ஷாலினி நியூட்டன்

The post மந்திரப் பானைகள்..! appeared first on Dinakaran.

Related Stories: