9 வகை கோயில்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமயக்குரவருள் ஒருவரான திருநாவுக்கரசர், தன்னுடைய திருப்பாடல் ஒன்றில் கோயில்களை ஒன்பது வகையாகப் பிரித்து வகைப்படுத்தி உள்ளார்.

பெருங்கோயில்

இந்த கோயிலில் விண்ணளாவிய விமானங்களும், விரிவான மண்டபங்களும், பெரிய திருச்சுற்றுகளும், திருமாளிகைப் பத்திகளும், மாடப்புரைகளையும் கொண்டு அனைத்து உறுப்புகளுடனும் வழங்குகின்ற திருவாரூர், மதுரை, திருவானைக்கா, திருவண்ணாமலை ஆகியவை பெருங்கோயில்களாகும்.

கரக்கோயில்

பெரிய மரங்களின் நிழலில் புல்கீற்று அல்லது ஓடு வேய்ந்து அமைக்கப்படுவது. சாலை, அர்த்தசாலைக் கூடம் என்று இது மூவகையாக அமைக்கப்படும். தில்லை சிற்றம்பலம் இவ்வகையாகும். இவ்வகையான கோயில்கள் இன்றளவும் கேரளத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது. இது தேர்ச்சக்கரம் போல அமைந்த கோயில் என்றும் இதனை சிலர் கூறுவர். கடம்பூர் கோயில், கரக்கோயில் என்று போற்றப்பெற்றுள்ளது.

ஞாழற்கோயில்

பல சின்ன சின்ன மரங்கள் சூழ்ந்த ஒரு கூடாரம் போன்ற இடத்தில் மரங்களின் நிழலில் அமைக்கப்படும் மேடைக் கோயில் இது. பெரும்பாலும் வேலி சூழ்ந்த காவணத்தில் அமைக்கப் படும். இவ்வகையான கோயில்களே பின்னாளில் நூறு கால், ஆயிரங்கால் மண்டபங்களுக்கு அடிப்படையாயிற்று எனலாம். முன்பு காலத்தில் இவ்வகை கோயில்களுக்கு மேல்கூரை இல்லை.

கொகுடி கோயில்

கொகுடி என்பது ஒரு வகை முல்லைச் செடி நெருங்கி அடர்ந்து வளர்ந்த முல்லைக்கொடி. பந்தர்ப்பரப்பின் இடையில் அமைக்கப்பட்ட கோயில். திருக்கருப்பறியல் என்ற தளத்தின் கோயில் என பெயர் பெற்றது.

இளங்கோயில்

இதை சில அறிஞர்கள் பாலாலயம் எனக் கூறுகின்றனர். ஒருசிலர் இளங்கோயில் என்பது திருவுண்ணாழி எனப்படும் கற்ப கிரகம் மட்டுமே அமைந்த கோயில் என்பர். மீயச்சூர்க் கோயில், இளங்கோயில் என பெயர் பெற்றது.

மணிக் கோயில்

இது அழகிய வண்ணம் தீட்டிய சிற்பங்களுடன் கூடிய அழகிய சுதை வேலைப் பாடமைந்த இந்த கோயிலாகும். திருவதிகைக் கோயில் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. பெரிய கோயில்களில் ருத்ராட்சத்தை போன்ற மணிகளால் அமைக்க, பெரும் சிறு சந்நதிகளே மணிக் கோயில் எனவும் சிலர் கூறுவதுண்டு. இதனை திருமுறைக்கோயில் எனவும் அழைக்கலாம்.

ஆலக்கோயில்

நாற்புறமும் நீர் சூழ்ந்துள்ள இடத்தில் அமையும் கோயில். தஞ்சை வல்லம் திருப்புகலூர் கோயில் முதலிய கோயில்கள் ஆலக்கோயில் வகையைச் சேர்ந்தவை. `ஆலம்’ என்னும் சொல்லுக்கு நீர்சூழ்ந்த இடம் என்று பொருள். ஒரு சிலர் ஆலமரத்தைச் சார்ந்து அமைந்த கோயில் என்பர்.

மாடக் கோயில்

யானைகள் ஏற இயலாதவாறு படிகள் பல கொண்ட உயரமான இடத்தில், கருவறை அமைந்த கோயில்கள். கோச்செங்கணான் எனும் சோழப் பேரரசின் இவ்வாறான பல கோயில்களை கட்டுவித்தான் என்பது வரலாறு.

தூங்கானை மாடக் கோயில்

தூங்குகின்ற யானையின் பின்புறம் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கோயில்கள். இதனை கஜபிருஷ்டம் என்பர். திருப் பெண்ணா கடம் கோயில் தூங்கானை மாடக்கோயில் வகையைச் சேர்ந்தது என தேவாரம் குறிப்பிடுகிறது. கோயில் என்றும் குறிப்பு வருகிறது திருவிழிமழலைக் கோயில் விண்ணிழி கோயில் என்றும் குறிப்பு வருகிறது. மேற்கொண்டு ஒன்பது வகை கோயில் உள்ளது, என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தொகுப்பு: ஆர். ஜெயலெட்சுமி

The post 9 வகை கோயில்கள்! appeared first on Dinakaran.

Related Stories: