கீழ்பவானி கால்வாய் தரையில் கான்கிரீட் தளம் போடக்கூடாது: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

சென்னை: கீழ்பவானி பிரதான கால்வாயின் தரையில் எக்காரணம் கொண்டும் கான்கிரீட் தளம் போடக்கூடாது என்று அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்கத்துக்காக பணிகள் துவங்குகின்ற நேரத்தில் கால்வாய் தரையில் கான்கிரீட் போடக்கூடாது என விவசாயிகளில் ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்தனர்.அரசு அந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால் பிரதான கால்வாயின் இருபுறங்களிலும் இருப்பவர்களுக்கு இதனால் பாதகம் ஏற்பட்டுவிடும் என்று சிலர் திட்டமிட்டு பொய் பிரசாரத்தை பரப்பிவிட்டார்கள்.

பல்வேறு முயற்சிக்கு பின் விவசாயிகள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் உருவாகியுள்ளது. எனவே, நின்று போயிருக்கிற பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறேன். கால்வாயின் தரையில் எக்காரணம் கொண்டும் கான்கிரீட் தளம் போடக்கூடாது என்றும், சேதமடைந்த மதகுகள் மற்றும் குறுக்கு கட்டுமானங்களை சீரமைத்திடவும், மிகவும் பலவீனமாக உள்ள கால்வாய் கரைப் பகுதிகளில் சுவர் அமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இந்தப் பணிகளை செய்வதன் காரணமாக கால்வாய் செல்லும் பகுதியில் குடிநீருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இப்பணியை செய்து முடித்து கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைத்திட விவசாய பெருங்குடி மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

The post கீழ்பவானி கால்வாய் தரையில் கான்கிரீட் தளம் போடக்கூடாது: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: