இலவச மின்இணைப்பு அதிகரிப்பு எதிரொலி டெல்டாவில் குறுவை சாகுபடி 1.77 லட்சம் ஏக்கராக உயர்வு: விவசாயிகள் உற்சாகம்

திருச்சி: கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பளவு 1.77 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியே பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதில் குறுவை, சம்பா, கோடை என முப்போக சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி உரிய நேரத்திலும், அதன் பின்னர் கடந்தாண்டு வரலாற்றிலேயே இல்லாத வகையில் முன்னதாகவே மே 24ம் தேதியும் திறக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக மாறியது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயிகள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க உற்சாகப்படுத்தியது. உரிய நேரத்தில் சாகுபடிக்கு தேவையான விதை, உரம், இடுபொருட்கள் போன்றவை கிடைக்க செய்ததாலும் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. நடப்பாண்டிலும் வழக்கம் போல் அடுத்த மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும். திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும். ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும். இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்’ என்றனர்.

வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நடப்பாண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 10ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கர் இலக்கில் 23 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கர் இலக்கில் 93 ஆயிரம் ஏக்கரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் ஏக்கர் இலக்கில், 51 ஆயிரத்து 368 ஏக்கர் என 4 மாவட்டங்களிலும் மொத்தம் 1.77 லட்சம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் இடுபொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

The post இலவச மின்இணைப்பு அதிகரிப்பு எதிரொலி டெல்டாவில் குறுவை சாகுபடி 1.77 லட்சம் ஏக்கராக உயர்வு: விவசாயிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: