செரிமானத்தைக் கூட்டும் பானகம்

நன்றி குங்குமம் தோழி

வயிற்றுக் கோளாறு, வாந்தி, கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் மசக்கை வாந்தி, மூட்டுவலி, ஜுரம் என பல நோய்களுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட மருந்து இஞ்சி. இதன் கஷாயமும், பானகமும் பயன்தரும் விதத்தையும், பயன்படுத்தும் முறையையும் காண்போம்.பானகம்: இஞ்சியை தோல் சீவி, துண்டு துண்டாக நறுக்கி, கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்தால், கொஞ்ச நேரத்தில் தெளியும். மேலோடு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதில் சம அளவு சர்க்கரை சேர்த்து அடி பிடிக்காமல் லேசான தீயில் காய்ச்சி, வடிகட்டவும். குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு, பச்சைகற்பூரம், ஜாதிக்காய் எல்லாம் கலந்து அரைத்த பொடியை ஒரே ஒரு சிட்டிகை இதில் சேர்க்கவும். இந்த இஞ்சி பானத்தை மதியம் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் ஒரு டீஸ்பூன் உட்கொள்ளவும். பசியும் அதிகமாகும். செரிமான சக்தியும் கூடும். வயிறு பாரமாக இருப்பது போன்ற உணர்வும் குறையும். அஜீரணத்தால் வரும் தலைவலி, ஜுரத்துக்கும் இது தீர்வு தருகிறது.

கஷாயம்: சில பெண்களுக்கு மாதவிலக்கின் போது அடி வயிற்று வலி அதிகமாக இருக்கும். உதிரப்போக்கு மிகக்குறைவாக இருக்கும். இதை சரி செய்ய இஞ்சிக் கஷாயம் உதவும். கொட்டைப் பாக்கு அளவில் நான்கு துண்டு இஞ்சியை தோல் சீவி, கழுவி, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக சுண்டியதும், இதில் கொஞ்சம் சர்க்கரையோ, வெல்லமோ சுவைக்காக சேர்க்கவும். மாதவிலக்கை எதிர்பார்க்கும் நாட்களில் இதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு ஒரு நாளில் மூன்று, நான்கு வேளை குடித்தால் மாதவிலக்கு இயல்பாகும்.சாறும் மோரும்: ஒரு துண்டு இஞ்சியை அரைத்து, அந்தச் சாற்றை ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப்பகுதியில் கொழுப்பு சேராமல் தடுக்கும். சேர்ந்த கொழுப்பையும் கரைக்கும்.

தொகுப்பு: இந்திராணி தங்கவேல், சென்னை.

The post செரிமானத்தைக் கூட்டும் பானகம் appeared first on Dinakaran.

Related Stories: