பாம்பு கடித்து பலியான குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் மலையில் 10 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த வேலூர் கலெக்டர்: ரூ.5.51 கோடியில் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு

அணைக்கட்டு: வேலூர் அருகே அல்லேரி மலையில் பாம்பு கடித்து குழந்தை பலியானதை அறிந்து மலைப்பாதையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் 10 கி.மீ நடந்தே சென்று ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அல்லேரி மலையில் உள்ள அத்திமர கொல்லை கிராமத்தில் கடந்த 26ம் தேதி இரவு பெற்றோருடன் வீட்டின் வெளியே தூங்கிய ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. குழந்தையின் உடலை பெற்றோர் கையில் தூக்கியபடி சுமார் 10 கி.மீ. நடந்தே சென்றனர்.

இந்த தகவலை அறிந்து அத்திமரத்துகொல்லை கிராமத்திற்கு நேற்று நேரில் சென்ற கலெக்டர் குமாரவேல்பாண்டியன், குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கலெக்டரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். முன்னதாக அல்லேரி மலையடிவாரத்தில் இருந்து கலெக்டரின் வாகனம் மண்சாலையில் சிக்கிக்கொண்டது. அதனை ஊழியர்கள் மீட்டனர். பாதை இல்லாததால், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். கலெக்டர் பைக்கை ஓட்டும்போது, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு அவருடன் அமர்ந்து சென்றார். ஆனால் சிறிது தூரம் சென்றதும் பாதை சரியில்லாமல், அத்திமர கொல்லை கிராமத்துக்கு 10 கி.மீ. தூரம் கலெக்டர் நடந்தே சென்றார்.

பின்னர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், ‘அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடர்பாக ஏற்கனவே வனத்துறையுடன் இணைந்து நில அளவை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. தார் சாலை அமைப்பதற்காக ரூ.5.51 கோடி மதிப்பில் தோராய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அல்லேரி கிராமத்திற்கு சாலை அமைக்க வேண்டிய 5.15 கி.மீ நீளத்தில், 4.8 கி.மீ தூரம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறையின் அனுமதி பெறப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்’ என்றார்.

The post பாம்பு கடித்து பலியான குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் மலையில் 10 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த வேலூர் கலெக்டர்: ரூ.5.51 கோடியில் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு appeared first on Dinakaran.

Related Stories: