திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்!

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். திருச்சி மலைக்கோட்டை பணிமனை கிளையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டு 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 லட்சம் பணப்பலன்களை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.

இன்றைக்கு அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர வேலை போக்குவரத்துக்கழகத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதியத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறார்.

அதேபோன்று கடந்த ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சினை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

The post திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: