கட்சி பஞ்சாயத்தை தீர்க்க முடியாமல் திணறும் பாஜ தலைவரை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

‘‘இலை கட்சி சேலம்காரரின் கையில் வந்த பிறகு திகிலில் இருக்கும் மாஜி அமைச்சர் யாரு…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த இலை கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்றதோடு மட்டுமில்லாமல் திருமணத்தையும் தலைமையேற்று நடத்தி வைத்தார் சின்ன மம்மி. இந்நிலையில் கடலோர மாவட்டத்துக்கு திடீர் என விசிட் அடித்தாராம். மேலும், அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து, தன்னை பார்க்க வந்த ஆதரவாளர்களிடம் நலம் விசாரித்தும், கட்சி குறித்தும் பேசினாராம்.

அப்படியே, சேலம்காரரின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் பெல்லானவர் பற்றி விசாரித்தராம். அவரது அரசியல் மூவ் இப்போது எப்படி இருக்கு என்பது வரை அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளாராம். இரண்டு அணியாக பிரிந்து கிடக்கும் இலை கட்சியினரை இணைத்து வரும் காலங்களில் தேர்தலை சந்திப்போம் என தன்னை சந்திக்க வந்தவர்களிடம் சொன்னாராம். அதை கேட்டவர்கள் அதிர்ச்சி அடையாத குறையாக சின்ன மம்மி உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து வெளியேற தலையை மட்டும் ஆட்டிவிட்டு வந்து இருக்கிறார்களாம்.

இந்த தகவல் வெளியே கசிந்ததால் பெல்லானவர் கலக்கத்தில் உள்ளாராம். இலை கட்சி பிரிந்து கிடந்தால் தான் கடலோர மாவட்டத்தில் நாம் எப்போதும் மாவட்ட செயலாளர் பதவியோடும், செல்வாக்காகவும் இருக்க முடியும். பிரிந்து கிடந்தவர்கள் ஒன்றாக இணைந்தால் நமக்கு இருக்கிற செல்வாக்கு காலியாகிவிடுமே என்ற அச்சம் அவரது மனதில் குடிகொண்டுள்ளதாம். அதோடு தனது பதவியும் பறிபோய் விடும். பொறுப்பில் இருக்கும்போதே 2வது கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மதிப்பது கிடையாது. பதவி பறிபோய் விட்டால் அடிமட்ட தொண்டர்கள் கூட நம்மல மதிக்க மாட்டாங்க. நம்மளை பற்றி சின்னமம்மி என்ன விசாரித்தார்கள் என தெரியவில்லை. சின்னமம்மி வந்து சென்றதில் இருந்து தூக்கமே போச்சு என அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பினாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கிகள் கலங்கி போய் இருக்காங்க என்றால் என்ன காரணமாக இருக்கும்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழ்நாட்டுல கஞ்சா, சாராய விற்பனையை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருது. குற்றவாளிகள் மட்டுமின்றி, கஞ்சா மற்றும் சாராய விற்பனையை தடுக்க தவறிய காக்கிகள் மேலயும் அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வருகிறதாம். அதேபோல கடந்த வாரம் கிரிவலம் மாவட்டத்துல சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்ஐ உட்பட 5 காக்கிகள் சஸ்பெண்ட் ஆனாங்க.

இதையடுத்து வெயிலூர் மாவட்டத்துல சாராய விற்பனையை தடுக்க தவறியதால, 2 ஸ்டார் காக்கி ஒருத்தர், சஸ்பெண்ட் செய்யப்பட்டாரு. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்னொரு 2 ஸ்டார் காக்கி சிக்கியிருக்காரு. வெயிலூர் மாவட்டம் பட்டு என்று முடியுற நகர் ஆட்சியில, சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்ததாக 2 ஸ்டார் காக்கியை தூக்கியடிச்சுட்டாங்களாம். இப்படி சாராய ரெய்டு ஒரு பக்கம் அதிரடியாக போய்கிட்டிருக்குற நேரத்துல, தப்புக்கு துணைபோறவங்க, தப்ப தடுக்காத காக்கிகள் மேலயும் நடவடிக்கை பாயும் சம்பவத்தால, காக்கிகள் வட்டாரம் கலக்கத்துல இருக்குது என்ற தகவல் காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ தேர்தல் வருவதற்குள் கட்சியினரை ஒருங்கிணைப்பதிலேயே மலையான தலைவருக்கு காலம் கடந்துவிடும் போலிருக்கே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் தாமரைக் கட்சியில் மாஜி எம்எல்ஏக்களிடையே கோஷ்டி பூசல் முடிவுக்கு வராமல் ஜவ்வு போல இழுத்து கொண்டே உள்ளதாம். மாவட்ட தலைவர் பதவியில் கலியமானவரும், மாநில துணைத்தலைவர் பதவியில் நான்கெழுத்து பெயரை கொண்டவரும் இருக்காங்க. ஒரே தொகுதியில் வசிக்கும் இருவருமே மாற்றுக் கட்சியிலிருந்து மாஜி எம்எல்ஏக்களாக தாமரைக்குள் அடைக்கலமானவங்க.

தங்கள் செல்வாக்கின் மூலம் மாவட்ட, மாநில பதவிகளைப் பெற்ற இவர்களுக்கு கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டு உள்ளதாம். மாநிலத் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் நான்கெழுத்து பெயரை கொண்டவரை அடக்கி வைக்க, மாவட்ட தலைவர் தனது ஆதரவாளர்கள் மூலம் பேனரில் பெயர் போடக்கூடாது, மேடையில் சீட்டு ஒதுக்கக் கூடாது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாராம். இருவரும் முடிந்த அளவில் யார் பெரிய ஆள் என்ற போராட்டத்தில் முட்டி மோதி வருகிறார்களாம்.

மாவட்டத் தலைவர் ஏற்கனவே இந்த பதவியில் இருக்கும்போது பாலியல் புகாரில் சிக்கி, ஆதரவாளர் மூலம் மீண்டும் பதவியை வாங்கி தாமரை தலைவர் மவுன்டனுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறாராம். இதனால் தாமரை தலைவர் மவுன்டன், மாஜி எம்எல்ஏ ஆதரவாளர் என இரு கோஷ்டிகளாக செயல்பட்டு இரு துருவங்களாக இருந்து வர்றாங்களாம். இருவரும் வீதியில் சண்டை போடாத குறையாக தற்போது புரம் மாவட்ட தாமரை கட்சி அரசியல் நிலவரம் போய் கொண்டிருக்கிறதாம்.

இதனை அறிந்த கட்சித்தலைமை பலமுறை கமலாலயத்தில் பஞ்சாயத்துக்கு அழைத்தும், இருவருமே போவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறார்களாம்.  பஞ்சாயத்தை நம்ம மாவட்டத்துல கூட்டுங்கள்.. எங்கள் பவரை காட்டுகிறோம் என்று அடம் பிடிக்கிறாங்க. வேறு வழியில்லாமல் புரம் மாவட்டத்திலேயே பஞ்சாயத்து நடத்த முடிவு எடுத்திருக்கிறதாம் தாமரை தலைமை. மாவட்டத்திற்கு, மாவட்டம் இப்படி நடந்தால், இன்னும் சில மாதங்களில் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் கட்சியினரை ஒருங்கிணைக்கவே காலம் போதாது… அதற்குள் எலக்‌ஷன் முடிந்துவிடும் என்று கவலைப்படுகிறாராம் தாமரை கட்சியின் தலைவரான மலை…’’ என்றார் விக்கியானந்தா..

 

The post கட்சி பஞ்சாயத்தை தீர்க்க முடியாமல் திணறும் பாஜ தலைவரை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: