1466 மாணவர்கள் குலுக்கல் மூலம் தேர்வு

நாமக்கல், மே 26: நாமக்கல் மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் சேர 1466 மாணவ, மாணவியர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 424 இடங்கள் காலியாக இருக்கிறது.
நாடு முழுவதும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், கல்வி அளிக்கும் வகையில், மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, நடப்பு கல்வியாண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்புகள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 145 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி 1890 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். மொத்தம் 4629 பேர் விண்ணப்பம் செய்தனர். அனைத்து தனியார் பள்ளிகளிலும், நுழைவு நிலை வகுப்பான எல்கேஜி மற்றும் முதலாம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டத்தில் உள்ள 103 பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மீதமுள்ள 42 பள்ளிகளில், இருக்கிற இடங்களுக்கு தகுந்தார் போல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து குலுக்கல் மூலம் மாணவ, மாணவியரை தேர்வு செய்ய சிறப்பு முகாம், மாவட்டத்தில் உள்ள 103 தனியார் பள்ளிகளிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டு மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். 42 பள்ளிகளில் குலுக்கல் இன்றி நேரடியாக மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) கணேசன் தலைமையில், 3 டிஇஓ.,க்கள் நியமிக்கப்பட்டு, குலுக்கல் நடைபெறும் பள்ளிகளில் விதிமுறைப்படி நடைபெறுகிறதா என்பதை கண்காணித்தனர். இதில், மாவட்டம் முழுவதுமுள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் சேர்த்துக்கொள்ள 1466 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரசின் விதிமுறைப்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான குலுக்கல் நடத்தப்பட்டது.

இதில், மாவட்டத்தில் உள்ள 49 தனியார் நர்சரி பள்ளிகளில் சேர்ந்து படிக்க 442 பேரும், 96 மெட்ரிக் பள்ளிகளில் சேர்ந்து படிக்க 1450 பேர் என மொத்தம் 1890 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒரே மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் சேர விண்ணப்பம் அளித்திருப்பார்கள். எமிஸ் இணையதளம் மூலம் மாணவ, மாணவியருக்கு அட்மிஷன் அளிக்கப்படும். தற்போது, தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவியரின் பெற்றோரின் செல்போன் நம்பருக்கு ஓடிபி எண், இரண்டு நாளில் அனுப்பி வைக்கப்படும். அந்த நம்பரை காட்டி குறிப்பிட்ட தனியார் பள்ளிகளில் அவர்களுக்கு சேர்க்கை அளிக்கப்படும். மேலும், தற்போதைய நிலவரப்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 424 இடங்கள் காலியாக உள்ளது,’ என்றனர்.

The post 1466 மாணவர்கள் குலுக்கல் மூலம் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: