கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்

நான் எப்போதுமே நேர்மறை மனநிலையோடுதான் இருப்பேன். ஆனால், அண்மைக்காலமாக எனக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகத் தோன்றுகின்றன. பயணத்தின்போது ஏறினால், ‘வண்டி விபத்துக்குள்ளாகிவிடுமோ?’ என்று தோன்றுகிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூடத் தோன்றுகிறது. இதிலிருந்து எப்படி நான் விடுபடுவது?
– செந்தில் வேல், நாமக்கல்.

மனித மனங்களில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது இயற்கையானது. முற்காலத்தில் காட்டில் வாழ்ந்தபோது, எப்போதும் பயத்துடனும் எதிர்மறையான எண்ணங்களுடனுமே வாழ்ந்திருக்கிறோம். அதன் மரபுத் தொடர்ச்சி இப்போதுவரை நீடிக்கிறது. சில எதிர்மறை எண்ணங்கள் எழுவது தவறல்ல. உதாரணமாக, வண்டியில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

குறைந்த வேகத்தில் வண்டி ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். எந்த வேலையைத் தொடங்கினாலும் வெற்றிகரமாக முடிக்க முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டால், வெற்றிகரமாக முடிப்பதற்கான வழிகளை யோசிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பதைவிட, அவற்றை ஆய்வு (Analyse) செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், உடனடியாக மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

என் அம்மாவுக்கு வயது 60. அவருடைய கை மற்றும் கால் பகுதிகள் திடீரென சில்லிட்டுப் போகின்றன. அண்மைக்காலமாக, தலைசுற்றுவதாகவும் சொல்கிறார். குறிப்பாக, தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த உணர்வு ஏற்படுவதாகக் கூறுகிறார். ஒருவேளை சர்க்கரைநோயாக இருக்கும் என்ற சந்தேகத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்தது. எதனால் இப்படி ஏற்படுகிறது?
– ரத்தின மூர்த்தி, மேல்மறையூர்.

இது போன்ற நிலையை `கோல்ட் ஃப்ளாஷ்’ (Cold Flash) என்று கூறுவோம். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், இப்படி ஏற்படும். உங்கள் அம்மா, அதீதக் கோபம் அல்லது அதீத சோகம் என எதற்கெடுத்தாலும் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுபவர் என்றால், அவற்றைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள். தினமும் மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். அடிக்கடி இப்படி `கோல்ட் ஃப்ளாஷ்’ ஏற்படுகிறதென்றால், நரம்பு சார்ந்த ஏதேனும் கோளாறு இருக்கலாம்.

எனவே, அது தொடர்பான மருத்துவரை அணுகுங்கள். தலைச்சுற்றல் பிரச்னைக்கும் இதுவே காரணம். தலைச்சுற்றல் சில நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தாலோ, ஏற்கெனவே ஒற்றைத்தலைவலி பிரச்னை இருந்தாலோ, தலைச்சுற்றலின்போது பேச்சு வராமல் இருப்பது அல்லது கண்கள் இருட்டுவது போன்றவை ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரைச் சந்திக்கவும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்து ஒன்றில் இடது கை மூட்டில், `ஹேர்லைன் ஃப்ராக்சர்’ (Hairline Fracture) ஏற்பட்டது. ‘மாவுக்கட்டு அவசியமில்லை’ என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இருந்தாலும், கழுத்தின் மேற்பகுதியிலிருந்து கை விரல்வரை நரம்பு இழுப்பதுபோல இருக்கிறது. இது ஏதாவது பிரச்னைக்கான அறிகுறியா?
– புஷ்பலதா, திண்டுக்கல்.

கீழே விழும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தண்டுவடம், அந்தப் பகுதியிலுள்ள எலும்பு அல்லது நரம்புகளுடன் உரசியிருந்தால், அந்த நரம்புகள் லேசான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம். அதனால், நரம்பு இழுப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே, சிகிச்சைகள் அமையும் என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்க்கவும். ஏற்கெனவே, தண்டுவடம் தொடர்பான பிரச்னைகள் அல்லது `செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸ்’ (Cervical Spondylosis) பிரச்னை இருப்பவர் என்றால், நரம்பு தொடர்பான பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிலையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைக் குறைத்துக்கொள்ளவும். தூங்கும்போது தலையணையைக் குறைவான உயரத்தில் வைத்துக்கொள்வது நல்லது.

குதிகால் வலிக்குத் தீர்வு என்ன?
கே.எஸ்.ராஜாராமன், திருமலையூர்.

குதிகால் பகுதியில் உள்ள இரண்டு எலும்புகள் இணையும் பகுதியில் ஏற்படும் உராய்வினால், இந்த வலி ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த எலும்புகள் உராய்வதால், அந்த இடத்தில் புதிதாக எலும்பு தோன்றும். உங்களுக்கு போடப்பட்ட ஊசி சிறிது காலத்திற்கு உங்களின் வலியை குறைக்கும். மாறாக வலியை சுத்தமாக நீக்க இரண்டு அல்லது மூன்று ஊசி போட வேண்டியதிருக்கும்.

மறுபடியும் வலி வராமல் தடுக்க

*காலை மற்றும் இரவு நேரங்களில் பாதங்களை சுடுதண்ணீரில் சிறிது நேரம் வைக்கலாம்.

*உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.

*வெறுங்காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

*காலுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும்.

*உடற்பயிற்சி அவசியம் (குதிகால்களையும், கால் விரல்களையும் மாற்றி மாற்றி செய்வது நல்லது).

*புதிதாக எலும்பு வளர்ந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

The post கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா appeared first on Dinakaran.

Related Stories: