கடந்த ஆண்டைப்போல மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும்

நாகப்பட்டினம், மே26: கடந்த ஆண்டைப்போல மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பொறுப்பு ஷகிலா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசிதாவது: மணியன்: வேதாரண்யம் தாலுகாவிற்கு குறுவை மற்றும் சம்பா பருவத்திற்கு புதிய ரக நெல் விதை வந்துள்ளதா? எத்தனை நாள், அந்த ரகங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்ய நடமாடும் வாகனம் வேதாரண்யம் பகுதிகளுக்கு வருவது இல்லை. இதனால் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.

இதை போக்க நடமாடும் மண் பரிசோதனை வாகனம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானிய விலையில் உழவு செய்து, வயல்களை செப்பனிட டிராக்டர்கள் வழங்க வேண்டும் என்றார்.
கமல்ராம்: தலைஞாயிறு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்க வேண்டும். தலைஞாயிறு பகுதியில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்றார்.

சம்பந்தம்: நிலம் ஒருங்கிணைப்பு சிறப்பு சட்டம்- 2023 தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வணிகம், உள் கட்டமைப்பு, நகர் மயமாக்கல், தொழில் மயமாக்கல் ஆகியவற்றுக்காக குளங்கள், ஆறுகள், நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவாக்கும் திட்டத்தை ஏற்கனவே ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் விவாதம் இல்லாமல், பொருள் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகள், விளை நிலங்களை பெரிதும் பாதிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.

பாபுஜி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை உழவு செய்வதற்கு கூடுதலாக செலவாகிறது. எனவே அரசு கோடை உழவு மானியம் வழங்க வேண்டும். கடந்தாண்டு போல் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும். ஆறுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தூர்வாரப்படாத வாய்க்கால்களை தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு டிராக்டர், ஸ்பிரே போன்ற வேளாண் உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றார்.

The post கடந்த ஆண்டைப்போல மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: