சேந்தமங்கலம் தாலுகா ஜமாபந்தியில் நலஉதவிகள்

சேந்தமங்கலம், மே 26: சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் 2வது நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் கலெக்டர் உமா, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில், 2வது நாளாக நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில், பொன்னார்குளம் முத்துகாபட்டி, சிதம்பரப்பட்டி, பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, பள்ளிப்பட்டி, கல்குறிச்சி, உத்திரகிடிகாவல் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய 64 மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களின் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் விவரம் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, பிறப்பு- இறப்பு பதிவேடு, நிலவரி வசூல் கிராம பதிவேடு உள்ளிட்டவைகளை சரிபார்த்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பட்டு வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களிடம், பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சுடையாம் பட்டி பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் உபயோக பொருட்களை கலெக்டர் உமா வழங்கினார். கூட்டத்தில் தாசில்தார் செந்தில்குமார், பிடிஓ.,க்கள் ரவிச்சந்திரன், சுகிதா, வேளாண் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சேந்தமங்கலம் தாலுகா ஜமாபந்தியில் நலஉதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: