வினைகளை வேரறுக்கும் விருட்ச தரிசனம்

தரிசனங்களிலேயே மிக உயர்வானது விருட்ச தரிசனம். காலையில் எழுந்தவுடன் மரங்களைப் பாருங்கள். பட்ஷி சப்தங்களைக் கேளுங்கள். மனம்புத்தெழுச்சி கொள்ளும். நாம் சில மனிதர்களைப் பார்த்து, ‘‘ஏன் மரம் போல் நிற்கிறாய்?’’ என்று கேட்கிறோம். அது தவறு. மரத்தை விட மனிதன் அதிகம் பயன் தருபவன் அல்ல. நாம் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறோம். கார்பன்டை ஆக்சைடு வெளியே விடுகிறோம். ஆனால் மரங்கள் நம் கழிவுகளான கரியமில வாயுவைத்தான் எடுத்துக்கொண்டு நாம் உயிர் வாழ்வதற்குரிய ஆக்சிஜனைத் தருகின்றன.

அதனால்தான் கம்பன் மரங்களை குறிப்பிடும் போது ‘‘தருவனம்’’ என்றான். காடுகள் இல்லாவிட்டால் வீடுகள் எங்கே? மழை எங்கே? மண் எங்கே? உயிர் எங்கே? பயிர் எங்கே? வாழை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருவெள்ளியங்குடி என்ற திருத்தலத்தில் வாழைமரம் (கதலி) தான் தல விருட்சம்.
கதலி கௌரி விரதம் என்று வாழை மரத்தை அடிப்படையாகக் கொண்ட விரதம் உண்டு. வாழை மரத்தின் இலை, காய், கனி, தண்டு, மட்டை என பயன்படாத பகுதியே இல்லை.

பயனில்லாத மரமோ செடியோ உலகத்தில் இருக்கிறதா? ஏதோ ஒரு வகையில் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் தரும். மனிதன் மரங்களை வளர்க்கவில்லை. ஆனால் மரங்கள் தான் மனிதனை வளர்க்கின்றன. பாதுகாக்கின்றன. உயிர் மூச்சு தருகின்றன. கவியரசு கண்ணதாசன் திருவிளையாடல் படத்தில் ஒரு பாடல் எழுதினார்.

பார்த்தால் பசுமரம் படுத்து விட்டால்
நெடுமரம்
சேர்த்தால் விறகுக்கு ஆகுமா, ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கறியும் மிஞ்சுமா? என்று.

மரத்தின் கரி அடுப்புக்காகும். மனிதன் சடலமாக எரிந்தால் கூட எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே விருட்சம் மனிதனை விட உயர்வானது. முக்கியமானது. பசுமையான மரங்களைப் பார்க்கும்போது மனம் தெளிவடையும். ஒவ்வொரு காலத்திற்கும் மரங்களின் மாற்றங்களைக் குறித்துத்தான் பருவகாலங்கள்.

இது இலையுதிர் காலம், இது வசந்த காலம் என்று சொன்னார்கள். அதை ஒட்டியே பல்வேறு ஆலயங்களில் உற்சவங்களும் நடத்தினார்கள். உதாரணமாக வசந்த காலத்தில் வசந்த உற்சவங்கள் என்று பல ஆலயங்களில் நடைபெறுவதைக் காணலாம். ஒரே ஒரு மரத்தையோ, செடியையோ நம்கைகளால் நாம் நட்டு பராமரித்தால், அது நம்முடைய குடும்பத்தைக் காக்கும். நம்முடைய ஜாதக தோஷங்களைப் போக்கும்.

புத்தன் போதிமரத்தடியில்தான் ஞானம் பெற்றார். மரத்தின் நிழலில் தான் சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக நால்வர்க்கு உபதேசித்தார்.

ஓரானீழல் ஒண்கழல் இரண்டும் முப்
பொழுதேத்திய
நால்வர்க் கொளிநெறி காட்டினை”
என்று திருஞானசம்பந்தர் திருவாக்காலும்,
“ஆலமர் நீழலற நால்வர்க் கன்றுரைத்த
ஆலமர் கண்டத்தரன்”
“ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு
மேலையுகத் துரைத்தான் மெய்த் தவத்தோன்”

என்ற நாலாயிரப்பிரபந்தம் இயற்பா திருவந்தாதி அடிகளாலும் இனிது விளங்கும். பகவானே வாசுதேவ தருச்சாயா என்கிறது வேதம். வாசுதேவனின் நிழலில் உயிர்கள் களைப்பு நீங்கி மகிழ்ச்சி அடைகிறது என்கிறது சாஸ்திரம்.

‘‘தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே’’ -என்பது திருவாய்மொழி.
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே.

– என்கிற வள்ளலார் பாட்டிலேயே பகவானையே மரங்களாக உருவகித்தார்.

திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் பெருமாளை விட நம்மாழ்வாருக்கு விசேஷம் அதிகம். அவர் யோகத்தில் அமர்ந்த புளிய மரம் 5000 ஆண்டுகளாக இன்னும் இருக்கிறது. அந்த புளிய மரத்தைத் தரிசிக்காமல் வரவே கூடாது. அந்த புளியமரம் தான் ஆழ்வாரின் அருளைப் பெற்றுத் தருகிறது. அந்த ஆழ்வாரின் அருள் தான் பெருமாளின் பூரணமான அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருகிறது.

புளிய மரத்தில் செய்யும் விரதத்தை திந்தீரணி கௌரி விரதம் என்று சொல்வார்கள். திந்தீரணி என்றால் புளியைக் குறிக்கும். இந்த விரதத்தால் சனி தோஷம் போகும். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பகவான் திரு நாமங்கள் அடுக்கடுக்காக வருகிறது. அதில் ஒன்று அமர பிரபுவே நம: என்பது. அதாவது அவன் அமரர்களுக்கு தலைவன். ஒருவர் சமஸ்கிருதம் தெரியாமல் பகவானுடைய நாமங்களைச் சொல்வதற்கு விரும் பினார். கோயில் வாசலில் அமர்ந்து அவரால் முடிந்த அளவு படித்தார். அவர் பதம் பிரிக்க முடியாமல் மரப் பிரபுவே என்று வாசித்தார்.

சமஸ்கிருத பண்டிதர் ஒருவர் இதைக் கேட்டு, ‘‘ஏன் மொழி அறிவு இல்லாமல் படிக்கிறாய்? பகவான் என்ன மரமா? அவன் மரப்பிரபுவா? அவன் அமர பிரபு அல்லவா?’’ என்று அவரைக் கடுமையாக கண்டித்தார். ‘‘ஐயோ அறிவின் குறைபாட்டால் இப்படிச் சொல்லும்படி ஆகிவிட்டதே! பகவானிடம் அபச்சாரப்பட்டு விட்டேனே’’ என்று துடித்தார். அன்று இரவு பகவான் பண்டிதர் கனவில் போய் பண்டிதரிடம் சொன்னார்.

‘‘அவன் அன்பினால் சொல்லுகின்றான். மரப்பிரபுவே என்று என்னைச் சொன்னதிலே என்ன குறை? நான் வனமாக இல்லையா? அஸ்வ நாரணன் என்று சொல்வதில்லையா? என்று கேட்டார். நைமி சாரண்யத்தில் அவர் விருட்சமாகவே காட்சி தருகின்றார். எனவே மரங்களை வணங்குவது பகவானை வணங்குவது போலத் தான். அப்படி நினைத்து வணங்க வேண்டும். ஒவ்வொரு நட்ஷத்திரத்திற்கும் ஒரு மரம் ஒரு செடி உண்டு. அந்தந்த நட்சத்திர நேயர்கள் அந்தந்த மரத்தையும் செடியையும் வளர்ப்பதிலும் வணங்குவதிலும் தங்களுடைய தோஷங்களை நீக்கிக்கொள்ளலாம்.

அஸ்வதி- ஈட்டி மரம்,
பரணி-நெல்லி மரம்,
கார்த்திகை-அத்திமரம்,
ரோகிணி-நாவல்மரம்,
மிருகசீரிடம்- கருங்காலி மரம்,
திருவாதிரை-செங்கருங்காலி மரம்,
புனர்பூசம்-மூங்கில் மரம்,
பூசம்- அரசமரம்,
ஆயில்யம்- புன்னை மரம்,
மகம்-ஆலமரம்,
பூரம் -பலா மரம்,
உத்திரம்-அலரி மரம்,
அஸ்தம்- அத்தி மரம்,
சித்திரை- வில்வ மரம்,
சுவாதி -மருத மரம்,
விசாகம்- விலா மரம்,
அனுஷம்- மகிழ மரம்,
கேட்டை-பராய் மரம்,
மூலம்- மராமரம்,
பூராடம்- வஞ்சி மரம்,
உத்திராடம்- பலா மரம்,
திருவோணம்- எருக்க மரம்,
அவிட்டம்-வன்னி மரம்,
சதயம்-கடம்பு மரம்,
பூரட்டாதி- தேமமரம்,
உத்திரட்டாதி- வேம்பு மரம்,
ரேவதி-இலுப்பை மரம்.

அதைப்போலவே ஒவ்வொரு தலத்துக்கும் விருட்சம் உண்டு. அதற்கு தல விருட்சம் என்று பெயர். சிலர் நேராகப் போய் சாமியை மட்டும் பார்த்துவிட்டு வந்து விடுகிறார்கள். அங்குள்ள மூர்த்தியை தரிசிப்பது போலவே, தீர்த்தத்தையும் தல விருட்சத்தையும் நாம் தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும், துளசியை பெருமாளுக்கும், வில்வத்தை மகாலட்சுமிக்கும், சிவபெருமானுக்கும், வேப்பிலையை அம்மனுக்கும் எனப் பிரித்து வைத்தார்கள். இவைகள் அனைத்துமே மருந்துப் பொருள்கள். மருத்துவன் இறைவன்.

மருத்துவனை தரிசித்து, மருந்துப் பொருள்களைப் பெறுவதுதான் ஆலய தரிசனம். இதில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் அதிகரிக்கும். பசுமையான மரங்களை வளருங்கள். தரிசியுங்கள். மனம் தெளிவாகும். சிந்தனை உருவாகும். வாழ்க்கை சுகமாகும்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post வினைகளை வேரறுக்கும் விருட்ச தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: