கரூர் அருகே குட்டையாக மாறிய பெரியாண்டாங்கோவில் தடுப்பணை

கரூர், மே 25: கரூர் மாநகரை ஒட்டியுள்ள பெரியாண்டாங்கோயில் அமராவதி தடுப்பணை தண்ணீரின்றி வறண்டு குட்டையாக குறைந்தளவு தண்ணீருடன் காட்சியளிக்கிறது. நிரம்பி வழிவது எப்போது என்று அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கரூர் மாவட்டம் ராஜபுரம், செட்டிப்பாளையம் வழியாக அமராவதி கரூர் மாநகரில் பயணித்து, திருமுக்கூடலூர் வழியாக மாயனூர் நோக்கிச் செல்லும் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் கரூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள பெரியாண்டாங்கோயில் அமராவதி ஆற்றின் குறுக்கே சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் இந்த தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் சமயங்களில் தடுப்பணையில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு கடல் போல காட்சியளிக்கும். அந்த சமயங்களில் இந்த பகுதியை சுற்றிலும் உள்ள அனைத்து தரப்பினரும் மீன் பிடித்தும், குளித்து விளையாடியும் மகிழ்ந்தனர். கடும் வெப்பம் காரணமாக தடுப்பணையில் தேங்கியிருந்த சிறியளவு தண்ணீரும் வற்றி தண்ணீரின்றி வறண்ட நிலையில் குட்டையாக காணப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், அந்த சமயத்தில் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் பட்சத்தில் தடுப்பணையில் திரும்பவும் தண்ணீர் தேக்கப்பட்டு நிரம்பி வழியும். எனவே, இந்த பகுதியினர், தடுப்பணை நிரம்பி வழியும் நாளை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூர் அருகே குட்டையாக மாறிய பெரியாண்டாங்கோவில் தடுப்பணை appeared first on Dinakaran.

Related Stories: