பெங்களூருவில் சூறை காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தில் கார் சிக்கி பெண் பலி

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுரங்க பாதையில் வெள்ளம் போல் தேங்கிய மழை நீரில் கார் சிக்கியதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் சில நாட்கள் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு மழை பெய்தது. இந்நிலையில் நேற்று பகல் 3 மணி அளவில் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்தன. பசவேஸ்வரா நகர், விஜயநகர், கோரமங்களா, அல்சூரு, ஜெயநகர் உள்பட பெங்களூரு முழுவதும் சூறை காற்றுடன் கன மழை பெய்தது.

இதனால், பெங்களூரு நகரம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்தன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் நேற்று பெங்களூருவை சுற்றி பார்க்க வந்திருந்தது. நேற்று பகல் 3 மணி அளவில் இந்த குடும்பம் வாடகை காரில் கப்பன் பார்க் வந்திருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் கேஆர் சர்க்கிள் சுரங்க பாதையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக ஆந்திராவை சேர்ந்தவர்கள் சென்ற கார் சிக்கிக்கொண்டது.

டிரைவர் காரை பின்புறமாக எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டாலும் அது முடியவில்லை. இதைத்தொடர்ந்து அதில் இருந்த நபர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே காரில் இருந்து வெளியேறினர். ஆனால், அதில் பயணித்த 22 வயதான பானுரேகா என்ற இளம் பெண் மயங்கிவிட்டார். மயக்கம் அடைந்த பானு ரேகாவை செயிண்ட் மார்த்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பானு ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். மழை நீரில் கார் சிக்கி கொண்ட உடனே அதில் இருந்த குடும்பத்தினரை பானுரேகா காப்பாற்றியுள்ளார். அதே நேரம் பானு ரேகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பலியான பானுரேகா இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

The post பெங்களூருவில் சூறை காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தில் கார் சிக்கி பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: