‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மேற்கு வங்க கட்டிட தொழிலாளி பலி வாலாஜா அருகே

வேலூர், மே 18: வாலாஜா அருகே ‘வந்தே பாரத்’ ரயில் மோதி மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி பலியானார். மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டம் ஹட்கச்சாவை சேர்ந்தவர் பாபாசிந்து மண்டல்(41). கட்டிடத்தொழிலாளி. இவர் திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு சென்றவர் மீண்டும் திருப்பூருக்கு சென்னை சென்ட்ரல் வரை டிக்கெட் எடுத்து வந்தார். அங்கிருந்து மீண்டும் மங்களூரு வரை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் ரயிலில் தனது நண்பருடன் நேற்று மதியம் திருப்பூருக்கு பயணம் செய்தார். வாலாஜா ரோடு ரயில் நிலையம் நெருங்கும்போது, பின்னால் வந்து கொண்டிருந்த சென்னை-கோவை ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழிவிடுவதற்காக பாபாசிந்து மண்டல் பயணம் செய்த வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பாபாசிந்து மண்டல் சிறுநீர் கழிப்பதற்காக கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.

இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், வழியில் எந்த காரணத்துக்காகவாவது ரயில் நிலையமாக இருந்தாலும், வழியில் ரயில் பாதையாக இருந்தாலும் நிறுத்தப்படும்போது இறங்கக்கூடாது. அவ்வாறு இறங்குபவர்களும், படியில் பயணம் செய்பவர்களுமே அதிகளவில் பக்கவாட்டில் கடந்து செல்லும் ரயில்களில் அடிப்பட்டு இறப்பதாக ரயில்வே போலீசார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியாதது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மேற்கு வங்க கட்டிட தொழிலாளி பலி வாலாஜா அருகே appeared first on Dinakaran.

Related Stories: