அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி பாஜக எம்எல்ஏவிடம் மோசடி: குஜராத்தை சேர்ந்தவர் மகாராஷ்டிராவில் கைது

நாக்பூர்: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் உதவியாளர் எனக்கூறி, பாஜக எம்எல்ஏவிடம் மோசடியில் ஈடுபட முயன்றவரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் மோர்பியில் வசிக்கும் நீரஜ் சிங் ரத்தோர் என்பவர், தன்னை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் உதவியாளர் என்று கூறிவந்தார். மத்திய நாக்பூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ விகாஸ் கும்பாரே என்பவரிடம் அணுகிய நீரஜ் சிங் ரத்தோர், ‘ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மாநில அரசில், அமைச்சர் பதவி வாங்கித் தருகிறேன்.

இதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து ஏற்பாடு செய்து தருகிறேன். அதற்காக பணம் வேண்டும்’ என்று கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ விகாஸ் கும்பாரே, இவ்விவகாரம் குறித்து தெஹ்சில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் நீரஜ் சிங் ரத்தோரை மோர்பியில் இருந்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களுக்கும், நாகாலாந்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கும், கோவாவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கும் அந்தந்த மாநிலத்தில் அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி பேரம் பேசியது தெரிய வந்தது. அதையடுத்து நீரஜ் சிங் ரத்தோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் தெஹ்சில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேலும் நீரஜ் சிங் ரத்தோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி பாஜக எம்எல்ஏவிடம் மோசடி: குஜராத்தை சேர்ந்தவர் மகாராஷ்டிராவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: