கொளத்தூர், செவலூரில் ஜல்லிக்கட்டு 1,100 காளைகள் சீறி பாய்ந்தன: 500 வீரர்கள் மல்லுக்கட்டு

பாடாலூர்/மணப்பாறை: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே கொளத்தூர் குப்பன் ஏரியில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் அழைத்து வரப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கலெக்டர் கற்பகம், எம்எல்ஏ பிரபாகரன், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல், எஸ்பி ஷ்யாம்ளாதேவி, ஆர்டிஓ நிறைமதி, ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாடிவாசல் வழியே முதல் கோயில் காளையும், அடுத்தடுத்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் மற்றும் கொளத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர். அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை செவலூர் வீரக்கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டை ரங்கம் ஆர்டிஓ முருகேசன் துவக்கி வைத்தார். மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு இடங்களிலும் நடந்த ஜல்லிக்கட்டுகளில் காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மின்விசிறி, மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

The post கொளத்தூர், செவலூரில் ஜல்லிக்கட்டு 1,100 காளைகள் சீறி பாய்ந்தன: 500 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Related Stories: