திருவாரூர் தெப்பத்திருவிழா தயாராகும் பிரமாண்ட தெப்பம்

திருவாரூர்,மே12: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமைபீடமாக விளங்குகிறது. இக்கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின் கோயிலின் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் கடந்த மார்ச் 9-ம் தேதியும், ஏப்ரல் 1-ம் தேதி ஆழித்தேரோட்ட விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப திருவிழா வரும் 25, 26 மற்றும் 27 -ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த 3 நாட்களில் ஒவ்வொரு நாள் இரவும் 3 சுற்றுகள் வீதம் இரவு 7 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த தெப்ப திருவிழா நடைபெறும். இதற்காக தற்போது இரும்பு பேரல்கள், மூங்கில் மற்றும் பலகை கொண்டு தெப்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 432 டின் பேரல்களில் ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் வீதம் 2 அடுக்குகளாக 7 அடி உயரத்திலும் 2 ஆயிரத்து 500 சதுர அடி அகலத்திலும் தெப்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.

முக்தியளிக்கும் தலம்: இக்கோயில் முக்தியளிக்கும் தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகும். பூங்கோயில் என்றழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என அமையப்பெற்றதாகும். கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருவாரூர் தெப்பத்திருவிழா தயாராகும் பிரமாண்ட தெப்பம் appeared first on Dinakaran.

Related Stories: