விருதுநகர் கால்நடை மருத்துவமனையில் போதிய மருத்துவர், ஊழியர் நியமிக்க வேண்டும்: கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

விருதுநகர், மே 11: மாவட்டத் தலைநகரான விருதுநகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. எனவே, தேவையான ஊழியர்களை பணியில் அமர்த்திட வேண்டுமென கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், திருத்தங்கல், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.
இதில், கால்நடை மருத்துவர், மந்தைக் காப்பாளர், ரேடியோ கிராபர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், கால்நடை ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியில் இருக்க வேண்டும். இம்மருத்துவமனைகளை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆடு, மாடுகள் வளர்ப்போர் மற்றும் வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்தி வந்தனர். இதனால், எவ்வித செலவுமின்றி தங்களது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில், முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் மட்டுமே உள்ளார். கால்நடை மருத்துவர், ரேடியோ கிராபர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்டோர் பணியில் இல்லாத நிலை உள்ளது. ஆனால், நாள்தோறும் சுமார் 40க்கும் மேற்பட்ட கால்நடைகளை இங்கு சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, சாதாரண ஏழை, எளிய மக்கள், தங்களது கால்நடைகளை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பலர், அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு தங்களது கால்நடைகளை கொண்டு செல்லத் தயங்குவதோடு, கூடுதல் செலவு செய்து தனியார் மருத்துவர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விருதுநகர் அருகே உள்ள திரவியநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், எங்களது வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அதை கொண்டு சென்றேன். ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார். மேலும், பலர் தங்களது செல்லப் பிராணிகளுடன் காத்திருந்தனர். இதனால், எனது வீட்டு நாய்க்கு சிகிச்சையளிக்க தாமதம் ஏற்பட்டது. அதற்குள் அதன் உடல் நிலை மேலும் மோசமாகியது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்பே சிகிச்சையளிக்கப்பட்டது எனவே, போதுமான ஊழியர்களை அரசு கால்நடை மருத்துவமனையில் நியமித்து கால்நடைகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

The post விருதுநகர் கால்நடை மருத்துவமனையில் போதிய மருத்துவர், ஊழியர் நியமிக்க வேண்டும்: கால்நடை வளர்ப்போர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: