26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பயன்பாட்டிற்கு வந்த 5 பருத்தி அரவை இயந்திரங்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

விளாத்திகுளம், மே 5: புதூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பருத்தி அரவை இயந்திரங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், எட்டயபுரம் ஆகியவை கரிசல் மண் நிறைந்த பகுதியாகும். இங்கு சம்பா வத்தல், குண்டு வத்தல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பகுதியில் விளையும் பருத்தியை விவசாயிகள், புதூர் வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் இயங்கி வரும் 5 பருத்தி அரவை இயந்திரம் மூலம் சுழற்சி முறையில் அரவை செய்து வருகின்றனர். ஒரு கிலோ பருத்தி அரவைக்கு ₹5 வீதம் அரவை கூலியாக பெறுவதன் மூலம் அரசுக்கும் பெரும் வருவாய் கிடைக்கிறது.

அதேசமயம் புதூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை மூலம் 1994ம் ஆண்டு 7 பருத்தி அரவை இயந்திரம் மற்றும் பருத்தி உலர வைக்கும் கொட்டகை கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டுகள் சிறப்பாக பருத்தி அரவை செய்யப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் பெருமளவு பயன்பெற்றனர். ஆனால், அதன் பிறகு சுமார் 26 ஆண்டுகளாக பருத்தி அரவை இயந்திரம் பழுதாகி செயல்படாததால் காட்சிப்பொருளாக இருந்து வந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பருத்தி அரவை இயந்திரம், கட்டிடம், கொட்டகை, உலர் களம் ஆகியவை பயன்பாடின்றி இருந்தது. பழுதான பருத்தி அரவை இயந்திரத்தை மீண்டும் இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த பருத்தி அரவை இயந்திரங்களில் 5 இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டு கடந்த மாதம் முதல் இயங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலி விற்பனைக்குழு செயலாளர் எழில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதூர் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை சாகுபடி காலத்தில் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளால் மானாவாரியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 1400 மெட்ரிக் டன் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைந்துள்ள பருத்தி அரவை ஆலை 25 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு தற்போது விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

உலர்கள கொட்டகையை சீரமைக்க வலியுறுத்தல்
புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி அரவை இயந்திரம் பழுது நீக்கி சீரமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்து நிலையில், ஆலையில் பருத்தி உலர வைக்கும் களங்களில் உள்ள கொட்டகைகள் பழுதடைந்து காணப்படுகிறது. அதனை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பயன்பாட்டிற்கு வந்த 5 பருத்தி அரவை இயந்திரங்கள் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: