பூந்தமல்லி அருகே ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: பூவை ஞானம் ஏற்பாடு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலில் நாளை (5ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பூவை ஞானம் தலைமையிலான விழா குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பகுதியில் மிகப் பழமையான அருள்மிகு  ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.

இதனால் அக்கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம் தலைமையில் திருப்பணி குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. மேலும், இக்கோயிலை முழுமையாக இடித்துவிட்டு, அங்கு புதிதாக கோயில் கட்டும் பணிகள் நடைபெற்றன. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றன.

இந்நிலையில், ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் நாளை (5ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன் கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, தனபூஜை உள்பட 3 கால யாகபூஜைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து நாளை (5ம் தேதி) காலை எல்லையம்மன் கோயிலின் அனைத்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் மகா கும்பாபிஷேகம் முடிந்ததும் அங்கு கூடியிருக்கும் மக்களின்மீது புனித நீர் தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பிறகு மாலை எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதையடுத்து நாளை இரவு அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. பின்னர் எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையும் நடைபெறுகிறது.

இக்கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாவும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான பூவை ஞானம், அவரது மனைவி நிர்மலா ஞானம் மற்றும் குடும்பத்தினர், நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

The post பூந்தமல்லி அருகே ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: பூவை ஞானம் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: