வல்லம்:தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகரில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை பேரூராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். தஞ்சாவூர் அருகே உள்ளது வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி. இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதனால் வல்லம் மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் வல்லம் பஸ் ஸ்டாண்ட் வந்து தஞ்சை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். வல்லம் சுற்றுப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இதனால் தினமும் ஏராளமானோர் வல்லம் வந்து செல்கின்றனர்.
இதனால் வல்லத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். மேலும் திருச்சி உட்பட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் வல்லத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வல்லத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்து வருகின்றனர்.மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வல்லம் – மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேருராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றினர்.
அப்பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து இருந்த கடைகள்,இரும்பு கொட்டகைகள் மற்றும் போக்குவரத்துக்கு பாதிப்பாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் வல்லம் எஸ்ஐ ஜோஸ்வின் சித்தாரா மேற்பார்வையில் அப்புறபடுத்தபட்டது. இதில் வல்லம் வருவாய் அலுவலர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ஹரிபிரியா,துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post வல்லம் பெரியார் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மும்முரம் appeared first on Dinakaran.
