நாகப்பட்டினம்: தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினத்தில் நடந்தது. தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்வு பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதன்படி, நடப்பு ஆண்டிற்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நாகப்பட்டினத்தில் உள்ள ஜெயலலிதா மீன்வள பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் தமீம்அன்சாரி வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ் பேச்சு போட்டியில் 57 மாணவ, மாணவிகளும், ஆங்கில பேச்சு போட்டியில் 38 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜமுனாராணி, நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹாமாலிம், நாகூர் தர்கா ஆலோசனை குழு தலைவர் செய்யதுமுஹம்மதுகலிபா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.
The post நாகப்பட்டினத்தில் பேச்சுப்போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.
